இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 45 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. எனவே பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கவலைகள் எத்தனை இருந்தாலும் மனிதனுக்கு மகிழ்ச்சியை தருவது ஒரு மழலையின் புன்னகை. இப்படி மழலைகளாய் ஈன்றெடுக்கும் குழந்தைகளை, கண்ணென பாதுகாத்து வளர்ப்பதும் மிகவும் அவசியம். ஆனால் இயந்திரமயமாகி விட்ட இன்றைய வாழ்க்கை சூழலில் இப்படியொரு ஈடுபாடு, பெரும்பாலான பெற்றோரிடம் இல்லை என்பதே உண்மை. ஆனால் ஏதாவது ஒருவிதத்தில் அவர்கள் காணாமல் போகும்போது, கதறித்துடித்து அலறுவது வாடிக்கையாக உள்ளது. இந்த வகையில் உலகம் முழுவதும் குழந்தைகள் காணாமல் போவது, இன்றளவும் தொடர்கதையாக உள்ளது.
இப்படி காணாமல் போகும் குழந்தைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மே 25ம் தேதி, ‘சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்’ அனுசரிக்கப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி காணாமல் போகும் குழந்தைகள் குறித்த பல்வேறு ஆய்வுகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இது குறித்து குழந்ைதள் நல மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: ஒருநாட்டின் உண்மையான சொத்தாகவும், வருங்காலத்தூண்களாகவும் இருப்பவர்கள் குழந்தைகள். அப்படிப்பட்ட நமது அடுத்த தலைமுறை தடம் தெரியாமல் மறைந்து செல்வதும், கடத்தப்படுவதும் ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் ஒரு சவாலாகும்.
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசு மற்றும் பெற்றோரோடு சமூகத்தின் கூட்டுப்பொறுப்பாகவும் இருக்க வேண்டும். இதை உணர்த்தும் வகையில் தான், சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஒரு இலக்கோடு இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தவகையில் நடப்பாண்டு ‘நம்பிக்ைகக்கான நீலம்’ என்ற பொருளில் சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் ஆண்டு தோறும் சுமார் 1லட்சம் குழந்தைகள் காணாமல் போவதாக ஆய்வுகள் கூறுகிறது. ஆண், பெண் என்று இருபால் குழந்தைகளும் இதில் அடங்குவர். அதேநேரத்தில் ஆண்குழந்தைகளோடு ஒப்பிடுகையில், காணாமல் போகும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம்.
இந்தியாவில் மட்டும் ஆண்டு தோறும் 45ஆயிரம் குழந்தைகள் காணாமல் போகின்றனர் என்றும் ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 11ஆயிரம் குழந்தைகள் காணாமல் போவதாக, தேசிய குற்றப்பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிக குழந்தைகள் காணாமல் போகும் மாநிலங்களில் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. வறுமை, பெற்றோரின் கண்டிப்பு, அலட்சியம் இவைகளால் வீட்டை விட்டு காணாமல் போகும் குழந்ைதகளே அதிகளவில் உள்ளனர். இப்படி அறியாத வயதில் செல்லும் சிறுவர், சிறுமிகள் பெரும்பாலும் புகாரின் பேரில், காவல் துறையால் மீட்கப்பட்டு வருகின்றனர்.
மற்ெறாரு புறம் பிச்சை எடுக்க வைக்கவும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தவும், உடல் உறுப்புகளுக்காகவும் கொடூர மனிதர்களால் கடத்தப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது. இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.
விழிப்புணர்வு நாள் கடைபிடிப்பது ஏன்?
1979ம் ஆண்டு மே மாதம் 25ம்நாள், அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த இட்டன்பாட்ஷ் என்னும் 6வயது குழந்தை, பள்ளிக்கு செல்லும் வழியில் காணாமல்போய்விடுகிறது. புகைப்பட கலைஞரான தந்தை, குழந்தையின் படத்தை எல்லா இடங்களிலும் வெளியிட்டு தேடும் பணியில் ஈடுபட்டார். அன்றைய ஊடகங்கள் இதை தலைப்பு செய்தியாக மாற்றியது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. 1979ம் ஆண்டு முதல் 1981ம் ஆண்டுவரை காணாமல் போன 29 குழந்தைகளின் உடல் ஆறு, குளம் என்று பல்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டது.
இந்த நிகழ்வு ஏற்படுத்திய தாக்கத்தினால் அன்றைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், மே 25ம்தேதியை ‘சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்’ என்று அறிவித்தார். பல்வேறு காரணங்களால் காணாமல் போகும் எதிர்கால தலைமுறையான குழந்தைகளுக்கு குடும்பம் மற்றும் அரசின் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துவதே, இந்தநாளின் முக்கிய நோக்கமாகும்.
