செஞ்சி அருகே சடலத்துடன் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு

செஞ்சி: செஞ்சி அருகே இறந்தவர் சடலத்துடன் இருளர் சமூகத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள வழுக்கம்பாறை பகுதியில் இருளர் சமூகத்தை சேர்ந்த 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இறந்தவரின் சடலத்தை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்வதில் வழி பிரச்னை இருந்து வருகிறது. பலமுறை தாசில்தாரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனிடையே நேற்று முன்தினம் இந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல் நலக்குறைவால் இறந்தார். நேற்று மாலை இறுதி சடங்கு நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் சடலத்தை எடுத்துச் செல்ல ஒரு தரப்பினர் வழிவிட மறுத்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சடலத்தை செஞ்சி - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து கருப்புக்கொடி ஏந்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த செஞ்சி தாசில்தார் ராஜன், இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி சடலத்தை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதனால் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இந்த மறியல் போராட்டத்தால், செஞ்சி - திருவண்ணாமலை சென்னை சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories:

>