மருத்துவ கலந்தாய்விற்கு அழைக்காமல் படிப்பை தேர்வு செய்யவில்லை என வந்த கடிதத்தால் மாணவி, பெற்றோர் அதிர்ச்சி

திண்டிவனம்:  திண்டிவனம் மாணவிக்கு மருத்துவ கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதமே அனுப்பாமல், படிப்பை தேர்வு செய்யவில்லை என்ற கடிதத்தை எதிர்த்து மாணவியின் தாயார் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   திண்டிவனம் ரோசணை பாரதிதாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி, முனியாண்டி தம்பதியரின் மகள் சந்திரலேகா. இவர் தாய்த்தமிழ்ப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையும், பின்னர் 12ம் வகுப்பு வரை முருங்கம்பாக்கம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றுள்ளார். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 471 பெற்று பள்ளியில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். அரசு வழங்கிய நீட் தேர்வு பயிற்சியை பெற்று, நீட் தேர்வில் 155 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், நேர்காணலுக்கான அழைப்போ அல்லது 7.5 சதவீதம் ஒதுக்கீட்டிலான கலந்தாய்வுக்கான அழைப்போ வராததால், அண்ணா பல்கலைக் கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் பி.இ. சிவில் இன்ஜினியரிங் படிப்பில் தமிழ் வழியில் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில், சந்திரலேகா மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்டதாகவும், அரசு மருத்துவக் கல்லூரியில் 3 இடங்கள் இருந்த போதிலும் அந்த இடங்களை தேர்வு செய்ய விருப்பமின்றி விலகி இருக்கிறீர்கள் எனவும் அவரது முகவரிக்கு தமிழக அரசு மூலமாக கடிதம் வந்துள்ளது. நேர்காணலுக்கு அழைக்காமலே அதில் கலந்து கொண்டதாகவும், தனக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ கல்வியை வேண்டாம் என தவிர்த்து விட்டதாகவும், தான் பதில் அளித்ததாக தனக்கு மருத்துவ கவுன்சில் மூலமாக ஒரு கடிதம் வந்திருப்பது சந்திரலேகாவையும் அவரது குடும்பத்தினரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.  இந்நிலையில் அவரது தாயார் மகேஷ்வரி தன் மகளை மருத்துவ படிப்பில் சேர்க்க உத்தரவிட வேண்டும். அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து வழக்கு குறித்து தமிழக அரசும், தேர்வுக்குழுவும் பதிலளிக்க உத்தரவிட்டும், மாணவி கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டாரா என்பது குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை மார்ச் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். கலந்தாய்விற்கு மாணவிக்கு கடிதம் வராமல் கலந்தாய்வில் கலந்துகொண்டு நிராகரித்ததாக வந்த கடிதத்தால் மாணவி மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். ஆகையால் தனக்கு மருத்துவம் படிக்க உதவ வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories:

>