மாஜி அமைச்சர் என்.ஆர்.காங்கிரசில் இணைந்தார் பாஜகவுடன் கூட்டணியா? ரங்கசாமி பரபரப்பு பேட்டி

புதுச்சேரி: புதுவையில் பாஜகவுடன் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி முடிவானதா என்பது குறித்து ரங்கசாமி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். புதுவை ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ  லட்சுமிநாராயணன் கடந்த மாதம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார்.  இவர் விரைவில் என்ஆர் காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி  கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் அலுவலகத்தில்  கட்சி தலைவர் ரங்கசாமி முன்னிலையில் லட்சுமிநாராயணன் கட்சியில்  இணைத்துக்கொண்டார். அவருக்கு சால்வை அணிவித்து ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக லட்சுமிநாராயணன்  ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து  கட்சியில் அடிப்படை உறுப்பினருக்கான அட்டையை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து  ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது: லட்சுமி நாராயணன் மக்கள் நலனுக்காக  எப்போதும் பாடுபடக்கூடியவர். நான் முதல் அமைச்சராக இருந்தபோது அவர்  அமைச்சராக இருந்து பல்வேறு மக்கள்நலப்பணிகளை சிறப்பாக செய்தவர்.

தொடர்ந்து  அமைச்சராகவும், எம்எல்ஏவாகவும் தொகுதி மக்களுக்கும், மாநிலம் சார்ந்த  பல்வேறு விஷயங்களிலும் சிறப்பாக செயல்பட்டவர்.  மேலும் கடந்த  ஐந்தாண்டுகளில் ஆளுங்கட்சி எம்எல்ஏவாக இருந்தாலும் ஆட்சியின் குறைகளை  ஒளிவுமறைவு இல்லாமல் வெளிப்படுத்தியவர்.காங்கிரஸ் ஆட்சியில்  மக்களுக்கு எந்தவித நலத்திட்டங்களையும் செயல்படுத்த முடியவில்லை. இதன்காரணமாக  காங்கிரஸ் கட்சியில்  இருந்து விலகி என்ஆர் காங்கிரசில் இணைந்துள்ளார். என்ஆர் காங்கிரசில்  இணைந்திருப்பதன் மூலம் கட்சி மேலும் வலுப்பெற்று இருக்கிறது என்றார்.   தொடர்ந்து அவரிடம் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதா? என  நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள், முக்கிய  நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார். பின்னர் அவரிடம் என்.ஆர்.  காங்கிரஸ் பாஜக கூட்டணியை விரும்புகிறதா? என்று கேட்டபோது நிர்வாகிகளிடம்  கருத்து கேட்டு வருகிறேன் என்றார். பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறதா? என்று  கேட்டபோது நேரம் வரும்போது சொல்கிறேன் என்று தெரிவித்தார்.

Related Stories: