திருவாரூர், மார்ச் 4: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 5 ஆண்டு காலமாக பூட்டப்பட்டிருந்த மற்றொரு பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று முதல் திறக்கப்பட்டது. திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தின் பின் புறத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி நாகை மாவட்டம் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இம்மருத்துவமனைக்கு சிகிச்சை மற்றும் பல்வேறு வேலை சம்பந்தமாக நாளொன்றுக்கு சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த திமுக ஆட்சியின்போது 2009ம் ஆண்டில் இந்த மருத்துவமனை துவங்கப்பட்டபோது மருத்துவமனைக்கு சென்று வரும் அரசு பேருந்துகள், மருத்துவமனை நுழைவு வாயிலில் இருந்து உள்ளே 300 மீட்டர் தூரத்தில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு வரை சென்று, பின்னர் மற்றொரு வழியான வட்டார போக்குவரத்து அலுவலகம் வழியாக திரும்புவது வழக்கம். இந்நிலையில் இம்மருத்துவமனை டீன் ஆக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் பொறுப்பேற்ற மீனாட்சி சுந்தரம் என்பவர் திடீரென இந்த மாற்று பாதையினை மதில் சுவர் கொண்டு அடைத்ததுடன் மருத்துவமனை நுழைவு வாயில் உள்ளேயும் பேருந்துகள் வரக்கூடாது என்று உத்தரவிட்டார். இதனால் வயதான நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.இது தொடர்பாக தினகரன் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிட்டதன் காரணமாக இந்த மருத்துவமனைக்கு புதிதாக பதவி ஏற்ற டீன் முத்துக்குமரன் என்பவர் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் அனுமதி வழங்கியதையடுத்து பேருந்துகள் மீண்டும் மருத்துவமனை வளாகத்திற்கு உள்ளே சென்று வந்தன. இந்நிலையில் பேருந்துகள் உள்ளே சென்று திரும்புவதற்கு சிரமம் இருந்து வருவது மட்டுமின்றி ஆம்புலன்ஸ்கள் சென்று வருவதற்கும் இடையூறாக இருந்து வருவதால் பழைய நடைமுறைப்படி மாற்றுப்பாதையினையும் திறந்துவிட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து மதில் சுவர் இடிக்கப்பட்டு புதிதாக இரும்பு கேட்டுகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் டீன் முத்துக்குமரன் மாற்றப்பட்டு புதியதாக ஜோசப் ராஜ் என்பவர் இரு தினங்களுக்கு முன் டீனாக பொறுப்பேற்ற நிலையில் பழைய டீன் முத்துக்குமரன் மற்றும் புதிய டீன் ஜோசப் ராஜ் இருவரும் சேர்ந்து நேற்று இந்த மாற்று பாதைக்கான கேட்டினை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் அன்சாரி, நிலைய மருத்துவர் ராமச்சந்திரன் மற்றும் டாக்டர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.