வயலுக்கு செல்ல சப்வே அமைத்து தராததால் ரயில்வே அகலப்பாதை பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள்

திருத்துறைப்பூண்டி, மார்ச்4: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு பகுதியில் திருத்துறைப்பூண்டி-அகஸ்தியன் பள்ளி அகல ரயில்பாதையில் விவசாய நிலங்களுக்கு செல்ல சப்வே அமைத்து தரவேண்டுமென்று தென்னக ரயில்வே துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு பகுதியில் திருத்துறைப்பூண்டி அகஸ்தியன்பள்ளி அகல ரயில்பாதையையொட்டி மேல்புற பகுதியில் சுமார் 1000 ஏக்கர் சாகுபடி நிலங்கள் உள்ளது. மீட்டர் கேட்ஜ் பாதையாக இருக்கும்போது விவசாயிகள் விவசாய நிலங்களுக்கு செல்ல மூன்று ரயில்வே கேட்டுகள் பயன்பாட்டில் இருந்தது. மேலும் மாட்டுவண்டி, டிராக்டர் போன்றவை சென்று வந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அகல ரயில்பாதை பணிகள் தொடங்கியபோது இந்த இடத்தில் ரயில்வேகேட் அமைக்காமல் ரயில்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதையறிந்த அப்பகுதி விவசாயிகள் சப்வே அமைத்துதரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி தென்னக ரயில்வே துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சப்வே அமைத்து தருவதாக உறுதியளித்தனர். இந்நிலையில் மீண்டும் பணிகள் தொடங்கியபோது சப்வே அமைக்க இடம் ஒதுக்காமல் ரயில்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையறிந்த அப்பகுதி விவசாயிகள் ஊராட்சி தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமையில் விவசாயிகள் மற்றும் அனைத்து கட்சியினர் ரயில்வே சப்வே அமைக்க வலியுறுத்தி கட்டிமேடு பகுதியில் ரயில்பாதை அமைக்கும் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இப்பகுதியில் கட்சி கொடியை கட்டி வைத்து மறித்து வைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தனியார் கான்டிராக்டர் உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தென்னக ரயில்வே பொதுமேலாளர் எங்களுக்கு சப்வே அமைக்க எந்தவித உத்தரவும் செய்யவில்லை, அவரிடம் இருந்து உத்தரவு வந்தால் மட்டுமே சப்வே அமைத்து தரமுடியும் என்றார். இதையடுத்து ஊராட்சி தலைவர் மாலினி ரவிச்சந்திரன் மற்றும் விவசாயிகள் சென்னை தென்னக ரயில்வே பொதுமேலாளரிடம் சப்வே அமைத்துதரக் கோரி கோரிக்கை மனு அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories: