சென்னை: ஆவடி ரயில்வே பணிமனையில் (EMU Workshop) மின்சாரம் தாக்கி உத்திர பிரதேசத்தை சேர்ந்த பயிற்சி ஊழியர் படுகாயம் அடைந்துள்ளார். பயிற்சி ஊழியரிடம் வேலை வாங்கியதாகவும் பயிற்சி மட்டுமே வழங்க வேண்டும் என்று விதி உள்ளது என சக பயிற்சி ஊழியர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சாரம் தாக்கிய பயிற்சி ஊழியர் தற்போது கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை கண்டித்து இருநூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சி ஊழியர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக டிஆர்இயு தொழில் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து ரயில்வே உயர் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்திருக்கிறார்கள். இருபின்னும் போராட்டமானது கைவிடப்படாமல் தொடர்ந்து நடைபெற்று கொண்டு வருகிறது.
இதனால் ஆவடி இஎம்யு வளாகத்தில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிகழ்ந்து வருகிறது. ரயில்வே அதிகாரிகள் தொடர்ந்து சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
