வத்திராயிருப்பு அருகே ஓடைப்பாலம் கட்ட பணிகள் துவங்கியது

வத்திராயிருப்பு, மார்ச் 4: தினகரன் செய்தி எதிரொலியால், தாணிப்பாறை செல்லும் வழியிவ் உள்ள தரைப்பாலக் கட்டுமானப்பணி துவங்கியுள்ளது. வத்திராயிருப்பிலிருந்து தாணிப்பாறை செல்லும் வழியில் லிங்கம் கோயில் பகுதியில் தரைப்பாலம் இருந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இந்த பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக அந்த பாலம் உடைக்கப்பட்டது. இதன் பின் ஓடையில் பள்ளம் தோண்டியதோடு எந்த பணியும் நடக்கவில்லை. இதனால் மழைக்காலங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அத்துடன் கோயிலுக்கும் செல்லும் பக்தர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் தை அமாவாசை திருவிழா நடைபெறுவதையொட்டி, உடைக்கப்பட்ட பாலத்தை சீரமைத்து பாலம் கட்டுமானப்பணிகளை துவக்க வேண்டும் என்று தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, லிங்கம் ஓடையின் பாலத்தை தற்காலிக போக்குவரத்திற்கு ஏற்றாற்போல், சுந்தரமகாலிங்கம் கோயில் நிர்வாகம் சீரமைத்துள்ளது. கடந்த 5 நாட்களாக லிங்கம் கோயில் ஓடைப்பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இந்த பாலம் கட்டும் பணி தொடக்கத்தை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து பாலமானது நிலைத்து நிற்பதற்கான வேலை நடைபெற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>