×

பழைய பஸ் நிலையத்தை மூடுவதால் பாதிப்பு ஏற்படும்; கலெக்டர் அலுவலகம் முன்பு ஆட்டோக்கள் நிறுத்தி டிரைவர்கள் எதிர்ப்பு: நடவடிக்கையை கைவிட குறைதீர்வு கூட்டத்தில் மனு

 

திருவண்ணாமலை, மே 26: திருவண்ணாமலை பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பஸ்களை, புதிய பஸ் நிலையத்துக்கு ஒட்டுமொத்தமாக மாற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என ஆட்டோ டிரைவர்கள் மனு அளித்தனர்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நேற்று நடந்தது. அதில் டிஆர்ஓ ராம்பிரதீபன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம் சுய தொழில் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 400க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.  மேலும் கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து துறைவாரியாக ஆய்வு செய்தார்.பின்னர் மாற்றுத்திறனாகளிகள் நல அலுவலத்திற்கு சென்று அங்கிருந்த மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை பெற்று உதவி உபகரணங்களை விரைந்து வழங்க உத்தரவிட்டார். இந்நிலையில் திருவண்ணாமலை பழைய பஸ் நிலையத்தில் இருந்து தற்போது இயக்கப்படும் வேலூர், பெங்களூரு, காஞ்சிபுரம், ஆரணி, சேத்துப்பட்டு, அவலூர்பேட்டை, செங்கம், சேலம் உள்ளிட்ட வழித்தட பஸ்களை முழுமையாக புதிய பஸ் நிலையத்துக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என ஆட்டோ டிரைவர்கள் சார்பில் மனு அளித்தனர்.

அதையொட்டி 50க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் கலெக்டர் அலுவலகத்துக்கு ஆட்டோ டிரைவர்கள் வந்தனர். அலுவலம் முன்பு வரிசையாக ஆட்டோக்களை நிறுத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும், பழைய பஸ் நிலையத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக இயங்கி வரும் ஆட்டோக்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தனர். மேலும், நகருக்கு வெளியே புதிய பஸ் நிலையம் அமைந்திருப்பதால், தொடர்ந்து பழைய பஸ் நிலையமும் செயல்பட வேண்டும், அதனால் நகருக்குள் வரும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

அதோடு பழைய பஸ் நிலையத்தை பயன்படுத்தாமல் முழுமையாக மூடுவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்படுவதால், தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கும் என்றனர். மேலும், தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களை தடுக்க, வழக்கத்தைவிட போலீசார் கடுமையான கெடுபிடியில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை சோதிப்பதை போல, பொதுமக்கள் துருவி துருவி சோதித்ததால், மனு அளிக்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இருக்கைகள் இன்றி மக்கள் பரிதவிப்பு
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்திருந்த பொதுமக்களுக்கு போதுமான இருக்கை வசதிகள் ஏற்படுத்தவில்ைல. எனவே, அலுவலகத்துக்கு வெளியே நூற்றுக்கும் மேற்பட்டோர் தரையில் அமர்ந்திருந்தனர். தொடர்ந்து பல மணி நேரம் அலுவலகத்துக்கு வெளியே பொதுமக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால் வேதனை அடைந்தனர்.

Tags : Tiruvannamalai ,Tiruvannamalai Collector ,
× RELATED தண்டராம்பட்டு அருகே சோகம்: கிணற்றில்...