பெண்கள், குழந்தைகள் எதிராக கொடுங்குற்றங்கள், வன்கொடுமைகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: விஜய்க்கு திருமாவளவன் வலியுறுத்தல்

 

சென்னை: பெண்கள், குழந்தைகள் எதிராக கொடுங்குற்றங்கள், வன்கொடுமைகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளாவன் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை சூலூர் அருகே பள்ளப்பாளையத்தில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி மே 21ம் தேதி இரவு காணாமல் போனார்.

பின்னர் கண்ணம்பாளையம் குளத்துக்கு அருகே தென்னந்தோப்பில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரித்ததில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் கார்த்திக் மற்றும் மோகன் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இரு குற்றவாளிகளையும் பிணையில் வெளிவிடாமல், வழக்கை விரைந்து விசாரித்து அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கிட ஆவன செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வண்டிப்பாளையத்தில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருக்கிறார் என்கிற செய்தி மேலும் நம்மை உலுக்கியெடுக்கிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக காவல்துறையில் ‘சிங்கப்பெண்’ சிறப்பு படை உள்ளிட்ட திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு, இதுபோன்ற கொடுங்குற்றங்கள் வன்கொடுமைகள் நடைபெறாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட இவ்விரு சிறுமிகளின் குடும்பத்தினருக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: