×

ஓமலூரில் போலீசாருடன் இணைந்து துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

ஓமலூர், மார்ச் 4: ஓமலூரில் போலீசாருடன் இணைந்து துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில், பொதுமக்கள் அச்சமிமன்றி வாக்களிக்க உரிய பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் துணை ராணு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஓமலூர் தொகுதியில் 25க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் இந்திய துணை ராணுவப்படையினரும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இந்நிலையில், ஓமலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அமைதியாக வாக்குப்பதிவு நடத்தும் விதத்தில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.சி.செட்டியப்பட்டியில் துவங்கிய அணிவகுப்பு, பல்பாக்கி பிரிவு, அண்ணா நகர், தர்மபுரி மற்றும் மேட்டூர் சாலை, ஓமலூர் பஸ் ஸ்டாண்ட், அண்ணா சிலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிப்பதை உறுதி செய்யவும், பாதுகாப்பாக தேர்தல் நடத்துவது குறித்தும், துணை ராணுவ படை வீரர்களும், போலீசாரும் துப்பாக்கியுடன் பேரணியாக சென்றனர். மேட்டூர்: மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவிந்தப்பாடி, கத்திரிப்பட்டி, கருங்கல்லூர்,  கொளத்தூர் மற்றும் மேட்டூர் பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க துணை ராணுவத்தினரும், போலீசாரும் கொடி அணிவகுப்பு நடத்தினர். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மேச்சேரி ரஜினிகாந்த், கொளத்தூர் முத்துசாமி, மேட்டூர் தொல்காப்பியன், கருமலைக்கூடல் சசிகலா தலைமையில் சட்டம் -ஒழுங்கு போலீசார் 69 பேர், துணை ராணுவத்தினர் 68 பேர் இந்த கொடி அணிவகுப்பில் பங்கேற்றனர்.

Tags : Deputy Military flag ,Omalur ,
× RELATED சேலம் மாவட்டம் ஓமலூரில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!