மக்காச்சோள கதிர்கள் தீயில் எரிந்து சாம்பல்

கெங்கவல்லி, மார்ச் 4: கெங்கவல்லி அருகே மக்காச்சோள கதிர்கள் எரிந்து சாம்பலானது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். கெங்கவல்லி அருகே சின்னபுனல்வாசல் பகுதியைச் சேர்ந்தவர் கலியன் மகன் செல்வம். விவசாயியான இவர், தனது தோட்டத்தில் விளைச்சலுக்கு வந்த மக்காச்சோளத்தை அறுவடை செய்து, கதிரில் இருந்த மணிகளை பிரித்தெடுப்பதற்காக தட்டைகளுடன் குவித்து வைத்திருந்தார். இந்நிலையில், நேற்று மதியம் ஒரு மணியளவில், மக்காச்சோள குவியல் திடீரென தீப்பிடித்து எரிந்தது. சுட்டெரிக்கும் வெசயிலுக்கு நன்கு காய்ந்து இருந்ததால் சிறிது நேரத்தில் கொளுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலர் பெரியசாமி தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று, தீயை அணைத்தனர். இதனால், அக்கம் பக்கம் தோட்டங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் மக்காச்சோளம் கதிர்கள் மற்றும் தட்டைகள் முழுவதும் எரிந்து நாசமானது.

இந்த சம்பவம் குறித்து செல்வம் கொடுத்த புகாரின்பேரில், கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிந்து முன்விரோதம் காரணமாக யாராவது மக்காச்சோள தட்டைகளுக்கு தீ வைத்தனரா என விசாரித்து வருகின்றனர்.

Related Stories: