×

செய்யாறு அருகே திருமணமான 4 மாதங்களில் மர்மச்சாவு காஞ்சிபுரம் புதுப்பெண்ணை கொன்று தூக்கில் தொங்கவிட்டதாக புகார்: வரதட்சணை கேட்டு கொடுமை என உறவினர்கள் மறியல்: சப்-கலெக்டர் வாகனம் முற்றுகை; போலீசுடன் வாக்குவாதம்

செய்யாறு: செய்யாறு அருகே திருமணமான 4 மாதங்களில் புதுப்பெண்ணை அடித்துக்கொன்று தூக்கிலிட்டதாக கூறி உறவினர்கள் சப்-கலெக்டர் வாகனத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்தபோது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா புத்தளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாதன்(45), கூலி தொழிலாளி, இவரது மனைவி அமிர்தலட்சுமி (38), செய்யாறு சிப்காட் ஷூ தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா ஆக்கூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மனைவி கங்கா என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. இதனால், அமிர்தலட்சுமியின் மகள் ஜீவலட்சுமியை(18), தனது மகன் ஜீவானந்தத்துக்கு திருமணம் செய்து வைக்க கங்கா விரும்பினார். அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்த போதிலும், நட்பு அடிப்படையில் திருமண ஏற்பாடு செய்தனர்.

ஜீவானந்தம் சிப்காட் சோழவரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த பிப்ரவரி 1ம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் கங்கா போன் செய்து ஜீவலட்சுமி நெஞ்சுவலியால் இறந்துவிட்டதாக அவரது பெற்றோருக்கு கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த ஜீவலட்சுமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடனடியாக ஆக்கூர் கிராமத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அவரது கழுத்தில் தூக்குமாட்டிய தடயம் மற்றும் உடலில் காயங்கள் இருந்தது தெரிந்தது.

இதுகுறித்து தூசி போலீசில் அமிர்தலட்சுமி புகார் செய்தார். அதில், மகளிடம் வரதட்சணை கேட்டும், வீட்டை எழுதி வாங்கி வா எனக்கூறி சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர். மகளின் சாவுக்கு மருமகன் ஜீவானந்தம், அவரது தம்பி தனுஷ், தாய் கங்கா உட்பட 5 பேர் காரணம் என்றும் அவர்கள் அனைவரும் சேர்ந்து அடித்து துன்புறுத்தி கொலை செய்து தூக்கில் தொங்கிவிட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தூசி போலீசார் ஜீவலட்சுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நேற்று செய்யாறு சப்-கலெக்டர் அம்பிகாஜெயின் சடலத்தை பார்வையிட அரசு மருத்துவமனைக்கு வந்தார். அப்போது ஜீவலட்சுமியின் குடும்பத்தினர் சப்-கலெக்டர் காரை முற்றுகையிட்டு மகள் சாவுக்கு காரணமான 5 பேரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக்கூறி மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் சிறிதுநேரத்தில் மருத்துவமனை அருகே உள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜீவலட்சுமியின் இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன்பேரில் மறியல் கைவிடப்பட்டது. இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இதனிடையே நேற்று மாலை பிரேத பரிசோதனை முடிந்து ஜீவலட்சுமியின் சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags : Kanchipuram ,Dowry ,Taluga Puttali ,Kanchipuram district ,Uttaramarur ,
× RELATED இன்ஸ்பெக்டர் தாக்கியதால் விஷம்...