நெசவாளர்களுக்கு 1,500 யூனிட் இலவச மின்சாரம் எப்போது? அமைச்சர் விஜய் பாலாஜி மழுப்பல்

ஈரோடு: ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு துணி நூல் பதனிடும் ஆலையில், கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து அவர் அளித்த பேட்டி: பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடைக்காக 139 லட்சம் மீட்டர் துணியில், 130 லட்சம் மீட்டர் துணி ஈரோடு துணி நூல் பதனிடும் ஆலைக்கு வந்துள்ளது. இதில் 110 லட்சம் மீட்டர் துணி தயாரிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறைக்கு 3 கட்டமாக அனுப்பப்பட்டுள்ளது.

மீதமுள்ள 17.50 லட்சம் மீட்டர் துணி தயார் செய்து, இம்மாதம் இறுதிக்குள் பள்ளிகளுக்கு அனுப்பப்படும். பொங்கலுக்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கான அரசாணை வெளியிடுவது குறித்து, முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். விரைவில் இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான அரசாணை வெளியிடப்படும். கைத்தறி, விசைத்தறிகளுக்கு 1,500 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவது தொடர்பான வாக்குறுதி பற்றி, முதல்வரிடம் ஆலோசித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் விஜய் பாலாஜி கூறினார்.

Related Stories: