புதுக்கோட்டை: திருச்சி ஜி.ஹெச்சில் தவறான சிகிச்சையில் உயிரிழந்த நர்சிங் மாணவி உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் சொந்த ஊரான மணக்குடிபட்டியில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் மாணவிகள் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா தொண்டைமான் நல்லூர் அருகே மணக்குடிபட்டியை சேர்ந்தவர் சீதாலட்சுமி(21). திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் அரசு செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார்.
அவருக்கு மூக்கில் சதை வளர்ச்சி பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் தான் படிக்கும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே பரிசோதனை செய்தார். அவருக்கு மூக்கில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் நடந்தது. முன்னதாக அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. சிறிது நேரத்திலேயே மாணவி உயிரிழந்தார். மருத்துவரின் தவறான சிகிச்சையில் மாணவி உயிரிழந்ததாக குற்றம்சாட்டி பெற்றோர், உறவினர்கள் மற்றும் சக மாணவிகள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர்.
திருச்சி கலெக்டர் சரவணன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், மாணவியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும், அரசு நிவாரணத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கலெக்டர் உறுதியளித்தார். இந்நிலையில் பிரேதபரிசோதனைக்கு பின் மாணவி சீதாலட்சுமியின் உடல் நேற்று காலை 6 மணிக்கு சொந்த ஊரான மணக்குடிப்பட்டி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நான்கு அரசு பேருந்துகளில் 273 மாணவிகள் வந்தனர். பின்னர் அவர்கள் மயானத்திற்கு சென்று மாணவியின் உடலை பார்த்து கதறி அழுது கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கிராமமே சோகத்தில் மூழ்கியது. பின்னர் மாணவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அஞ்சலி செலுத்திய மாணவிகள் பேருந்தில் புறப்பட்ட போது உன்னை இங்கேயே விட்டுவிட்டு செல்ல வா வந்தோம் என்று கூறி பேருந்து அதிர கதறி அழுதது பார்ப்பவர்களையும் சோகத்தில் மூழ்கடித்தது.
* மாணவியின் சகோதரிக்கு பணிக்கான ஆணை
மாணவி சீதாலட்சுமியின் சகோதரியான புவனேஸ்வரி டிப்ளமோ நர்சிங் படித்துள்ள நிலையில் அவருக்கு தற்காலிக பணிக்கான ஆணையையும், சீதாலட்சுமி தாயார் கலைச்செல்வி பெயரில் இலவச வீட்டு மனை பட்டாவையும் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ், கலெக்டர் அருணா ஆகியோர் வழங்கி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
அப்போது மாணவி எதனால் உயிரிழந்தார் என்பதை வெளிப்படையாக ஏன் சொல்லவில்லை. இதுபோல் ஒரு சம்பவம் மற்றவர்களுக்கு இனி நடைபெறக்கூடாது. அதேபோல் மாணவிக்காக போராடிய சக செவிலியர் மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அமைச்சரிடம் உறவினர்கள் தெரிவித்தனர்.
* தவறு நடந்திருந்தால் கட்டாயம் நடவடிக்கை
அமைச்சர் முமகது பர்வேஸ் நிருபர்களிடம் கூறும்போது, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தவறு நடந்தது உறுதி செய்யப்பட்டால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
