- ஐக்கிய மாநிலங்கள்
- ஈரான்
- ஹார்முஸ் ஜலசந்தி
- ஜனாதிபதி
- டிரம்ப்
- இஸ்லாமாபாத்
- அதிபர் டிரம்ப்
- ஐக்கிய
- மாநிலங்களில்
- எங்களுக்கு
இஸ்லாமாபாத்: ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது உள்ளிட்ட அம்சங்களுடன் அமெரிக்கா-ஈரான் இடையே விரைவில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாக அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படுவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பதிவில், ‘‘அமெரிக்கா, ஈரான் மற்றும் பிராந்திய வல்லரசுகளுக்கு இடையே இறுதி வடிவம் பெறுவதற்கு உட்பட்ட வகையில் ஒரு ஒப்பந்தம் பெருமளவில் பேசி முடிக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது உள்ளிட்ட அம்சங்களை கொண்ட இந்த ஒப்பந்தம் விரைவில் அறிவிக்கப்படும்’’ என்றார். அமெரிக்கா-ஈரான் இடையே மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று தனது எக்ஸ் தளத்தில், ‘‘சவுதி அரேபியா, கத்தார், துருக்கி, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், பஹ்ரைன் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் அதிபர் டிரம்ப் தொலைபேசியில் உரையாடினார்.
தற்போதைய மேற்கு ஆசியாவின் நிலைமை குறித்தும், பிராந்தியத்தில் நீடித்த அமைதியை கொண்டுவருவதற்காக நடைபெற்று வரும் அமைதி முயற்சிகளை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்தும் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள இந்த கலந்துரையாடல்கள் பயனுள்ள வாய்ப்பை வழங்கியது. எனவே அமெரிக்கா-ஈரான் இடையே அடுத்தகட்ட அமைதி பேச்சுவார்த்தை விரைவில் நடக்கும் என நம்புகிறோம்’’ என்றார்.
அமெரிக்காவும் ஈரானும் 60 நாள் போர் நிறுத்த நீட்டிப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிலையில் இருப்பதாகவும் இந்த போர் நிறுத்த நீட்டிப்பின் போது ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும். ஈரான் சுதந்திரமாக எண்ணெய் விற்க அனுமதிக்கப்படும். ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை கைவிடுவது, அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படும். இதே போல, டெல்லி வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஈரானுடனான ஒப்பந்தம் தொடர்பாக இன்னும் சில மணி நேரங்களில் உலகிற்கு நல்ல செய்தி வரும்’’ என்றார்.
* ஈரான் மறுப்பு
டிரம்பின் கருத்துக்களை ஈரானின் பார்ஸ் செய்தி நிறுவனம் மறுத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் தனது கட்டுப்பாட்டை தொடர்ந்து தக்க வைத்திருக்கும் என்றும், இப்பகுதியை கடந்து செல்லும் கப்பல்களின் எண்ணிக்கையை போருக்கு முந்தைய நிலைக்கு திரும்ப அனுமதிக்க மட்டுமே ஈரான் ஒப்புக் கொண்டதாகவும் இது எந்த வகையில் தடையற்ற போக்குவரத்திற்கு திரும்புவதை குறிக்காது என்றும் கூறி உள்ளது. ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் அனுமதி இல்லாமல் எந்த முடிவும் எடுக்க இயலாது என அந்நாட்டின் அதிபர் பெசேஷ்கியன் கூறி உள்ளார். எனவே ஒப்பந்தம் கையெழுத்தாகுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
