விதை ஆய்வு துணை இயக்குநர் திடீர் ஆய்வு

ஓமலூர், மார்ச் 4: ஓமலூர் பகுதியில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் சேலம், விதை ஆய்வு துணை இயக்குநர் சண்முகம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தேர்தல் நேர பரபரப்பை பயன்படுத்தி போலி விதைகள், முளைப்பு திறனற்ற விதைகள் விற்பனையை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்கள், நாற்றுப் பண்ணைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது, விதை விற்பனை நிலையங்களில் விதை உரிமம்,  விதை இருப்பு மற்றும் விலைப்பட்டியல் பலகை பராமரிக்கப்படுகிறதா என்பது ஆய்வு செய்யப்பட்டது. மேலும், விற்பனை நிலையங்களில் உள்ள விதை இருப்புகளை ஆய்வு செய்து அதற்கான கொள்முதல் பட்டியல், பதிவுச்சான்றிதழ், முளைப்புத்திறன் அறிக்கை சரியாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மரபணு மாற்று விதைகள், வீரிய பருத்தியில் பிடி தொழில்நுட்பத்திற்கு மட்டும் அரசினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை தவிர மற்ற மரபணு மாற்று தொழில்நுட்பங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, விதை விற்பனையாளர்கள் பிடி தொழில்நுட்பம் உள்ள வீரிய பருத்தி விதைகள் தவிர மற்ற மரபணு மாற்று தொழில்நுட்பம் செய்த விதைகளை விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வின்போது, ஓமலூர் விதை ஆய்வாளர் கிரிஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories:

>