- கோயம்புத்தூர்
- அமைச்சர்
- மதுவிலக்கு மற்றும் கலால் வரி
- மதுவிலக்கு
- விக்னேஷ்
- கோயம்புத்தூர் விமான நிலையம்
கோவை: பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவதை சினிமாவை போல ஒரே நாளில் மாற்றிவிட முடியாது என மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் தெரிவித்துள்ளர். கோவை விமான நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் நேற்று முன்தினம் இரவு நிருபர்களிடம் கூறியதாவது: டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால் எல்லா பிரச்னைகளும் தீர்வாகிவிடுமா என்றால் 4 ஆயிரம் கடைகளையும் மூடிவிடலாமே. கடையை மூடினால் கள்ள சாராயம், கஞ்சா, போதை பொருட்கள் இன்னும் அதிகமாக உள்ளே வந்துவிடும்.
பொதுமக்களுக்கு இடையூறு உள்ள பகுதிகளில் இருக்க கூடிய கடைகளை எடுத்துச்சென்று ஊர் எல்லைக்கு வெளியே ஒதுக்குப்புறமாக யாருக்கும் இடையூறு இல்லாத இடத்தில் வைக்க வேண்டும். 45 வயதுள்ள மதுபிரியர்களை திருத்த வேண்டும் எனில் மிகப்பெரிய கஷ்டம். போதை மறுவாழ்வு மையங்களில் சிகிச்சை பெற்று மீண்டு வருபவர்கள்கூட மீண்டும் குடிபோதைக்கு அடிமையாகி விடுகின்றனர்.
அவர்கள் உளவியல் ரீதியாகவே பாதிப்படைந்துள்ளனர். பள்ளிகளில் இருந்தே மாற்றம் கொண்டு வர வேண்டும். இனி டாஸ்மாக் பார்களில் 6 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படும். விதிமுறைகளுக்கு உட்பட்டு மட்டுமே பார்கள் நடத்த வேண்டும். பல வகைகளில் திருடுவதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம் தான் பாட்டிலுக்கு 10 ரூபாய். இதனை சிலர் நியாயம் செய்கின்றனர். அந்த தொழிலாளர்கள் கூறும் காரணங்கள் சரியாக இருக்கிறது.
இதற்கு தீர்வுகாண மிகப்பெரிய அதிரடி திட்டம் தயாராகி கொண்டிருக்கிறது. கரண்ட் பில்லை டாஸ்மாக் நிர்வாகம் கட்டும் சூழல் ஏற்படுத்தப்படும். எம்.ஆர்.பி-க்கு மேல் ஒரு ரூபாய் கூட வாங்க கூடாது. இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவும் இருக்கிறது. டாஸ்மாக் துறையை உடனடியாக மாற்றியமைக்க முடியாது. பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவதை சினிமாவை போல ஒரே நாளில் மாற்றிவிடவும் முடியாது. அது நீண்ட கால செயல் திட்டம். இவ்வாறு அவர் கூறினார்.
