சிவகிரி: சிவகிரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தாக்கியதால் விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தளவாய்புரத்தை சேர்ந்தவர் அந்தோணிராஜூ (63). விவசாயியான இவருக்கும் அருகே வசிக்கும் பேச்சிபாண்டி மனைவி பசுபதி (37) என்பவருக்கும் இடப்பிரச்னை இருந்து வந்தது.
இதுதொடர்பான புகாரின்படி விசாரணைக்கு சிவகிரி காவல்நிலையத்துக்கு கடந்த 21ம் தேதி மாலை சென்ற அந்தோணி ராஜூவை இன்ஸ்பெக்டர் முரளிதரன் அவதூறாக பேசி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த அந்தோணிராஜூ பூச்சி கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக ேபாலீசார் அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் அந்தோணி ராஜூவின் மனைவி செல்லம்மாள் தனது கணவரை இன்ஸ்பெக்டர் அவதூறாக பேசி தாக்கியதால்தான் அவர் தற்கொலை செய்துள்ளார். எனவே இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நேற்று மாலை அந்தோணி ராஜூவின் உறவினர்கள் சிவகிரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 50க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
தகவலின் பேரில் நேற்று மாலை 6 மணிக்கு அங்கு வந்த புளியங்குடி டிஎஸ்பி மதன் போராட்டத்தில் ஈடுபட்ட அந்தோணி ராஜூவின் மகன் இசக்கி துரை மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
* காத்திருப்போர் பட்டியலுக்கு இன்ஸ்பெக்டர் மாற்றம்
சிவகிரி காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தாக்கியதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள நெல்லை எஸ்பி பிரசண்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இவ்விவகாரம் தொடர்பாக சிவகிரி போலீசார்ிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்.
தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்தார். மேலும் இடப்பிரச்னையில் புகார் அளித்த பசுபதியிடமும் அவர் விசாரணை நடத்தினார். இதைதொடர்ந்து விசாரணை அறிக்கையை அவர் சரக டிஐஜியிடம் விரைவில் தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் நெல்லை சரக டிஐஜி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் முரளீதரன் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றப்பட்டார்.
