×

ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல் பாக்.கில் பயணிகள் ரயிலில் குண்டுவெடித்து 24 பேர் பலி: பலூசிஸ்தானில் பயங்கரம்

 

கராச்சி: ராணுவ வீரர்களை குறிவைத்து பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பயணிகள் ரயில் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 24 பேர் பலியாகினர். 70 பயணிகள் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா கன்டோன்மென்ட்டில் இருந்து குவெட்டா ரயில் நிலையம் நோக்கி குறுகிய தூர பயணிகள் ரயில் நேற்று காலை 8 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. பக்ரீத் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல இணைப்பு ரயில்களை பிடிப்பதற்காக பொதுமக்கள் பலரும் இந்த ரயிலில் பயணித்தனர். மேலும், கன்டோன்மென்ட்டில் இருந்து ராணுவ வீரர்களும் ரயிலில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சமன் பதக் ரயில் நிலையம் அருகே வந்த போது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று ரயில் மீது மோதியது. இதில் ரயிலின் இன்ஜின் மற்றும் 3 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. சக்திவாய்ந்த குண்டுவெடிப்பால், அப்பகுதியில் நின்றிருந்த 10க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சாம்பலாகின. குடியிருப்பு கட்டிடத்தின் சுவர்கள் இடிந்து சேதமடைந்ததோடு, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து தெறிந்ததால் மக்கள் பீதி அடைந்தனர்.

இந்த பயங்கர தாக்குதலில், 14 பேர் பலியானதாக பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதில் 3 பேர் பிரான்டியர் கார்பஸ் படையை சேர்ந்த ராணுவ வீரர்கள். எனினும் இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 24 பயணிகள் பலியானதாகவும், 70 பேர் காயமடைந்ததாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெஷாவர் நோக்கி சென்று கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குவெட்டா ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தடை செய்யப்பட்ட பலூச் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ரயிலில் ராணுவ வீரர்களை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு கூறி உள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags : Pakistan ,Balochistan ,Karachi ,Pakistan's Balochistan ,Quetta Cantonment ,Quetta Railway Station ,
× RELATED அதிபர் டிரம்பை கொல்ல சதி? வெள்ளை...