போபால்: மாடல் அழகியும், நடிகையுமான நொய்டாவை சேர்ந்த திவிஷா சர்மா (33) கடந்த 12ம் தேதி மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தனது கணவர் வீட்டில் தூக்கில் சடலமாக மீட்கப்பட்டார். வரதட்சணை கொடுமையால் திவிஷா தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். போதைப் பொருளுக்கு திவிஷா அடிமையானவர் என கணவர் குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் திவிஷாவின் கணவரும் வழக்கறிஞருமான சமர்த் சிங் 10 நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன் போலீசார் அவரை கைது செய்து 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், மபி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி திவிஷா உடலுக்கு 2வது முறையாக எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் நேற்று பிரேத பரிசோதனை செய்து முடித்தனர். இதன் பின் போபாலில் உள்ள இடுகாட்டில் மாலை 5 மணிக்கு திவிஷா உடலுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.
