×

அதிபர் டிரம்பை கொல்ல சதி? வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிசூடு நடத்திய வாலிபர் சுட்டு கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி

 

வாஷிங்டன்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே உள்ள சோதனை சாவடியில் வாலிபர் துப்பாக்கிசூடு நடத்தினார். அவரை ரகசிய பிரிவு போலீசார் சுட்டு கொன்றனர். அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்த போது நடந்த துப்பாக்கிசூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே, 17வது தெரு மற்றும் பென்சில்வேனியா அவென்யூ பகுதியில் உள்ள சோதனை சாவடியில் நேற்றுமுன்தினம் மாலை 6 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் திடீரென தனது பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி சுடத்தொடங்கினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அமெரிக்க ரகசிய பாதுகாப்பு படை அதிகாரிகள், உடனடியாக பதில் தாக்குதல் நடத்தினர். வீரர்களின் அதிரடி தாக்குதலில் மர்ம நபர் மீது குண்டுகள் பாய்ந்தன. படுகாயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த நபர் உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது, அந்த வழியாக சென்ற ஒருவர் மீது குண்டு பாய்ந்தது. அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிசூட்டில் ஈடுபட்டவர் நசீர் பெஸ்ட்(21) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

மேரிலாண்டை சேர்ந்த நசீர் பெஸ்ட் மன நல பிரச்னைகளுக்காக சிகிச்சை பெற்று வந்தார் என்பது தெரிய வந்துள்ளது. தன்னை இயேசு கிறிஸ்துவின் அவதாரம் என்று கூறி வந்துள்ளார். வெள்ளை மாளிகை வளாகத்திற்கு அருகில் வரக்கூடாது என்று இவருக்கு ஏற்கனவே நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அதை மீறி வந்த போது துப்பாக்கிசூட்டில் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் நடந்த போது அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்தார். ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடனான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அவர் ஈடுபட்டிருந்தார். அப்போது இந்த துப்பாக்கிசூடு சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்க புலனாய்வு துறை(எப்பிஐ) இயக்குனர் காஷ் படேல் எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், வெள்ளை மாளிகை வளாகத்துக்கு அருகே நடந்த துப்பாக்கிசூடு சம்பவத்தையடுத்து எப்பிஐ சம்பவ இடத்தில் இருந்து ரகசிய சேவை வழங்கி வருகிறது. எங்களால் முடிந்தவரை பொதுமக்களுக்கு தகவல் தெரிவிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

* டிரம்ப்பை குறிவைத்து இதுவரை நடந்த தாக்குதல்கள்

2024ல் அதிபர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்த போது டிரம்பை கொல்ல சதி நடந்தது. அப்போது லேசான காயத்துடன் தப்பினார். அதிபர் பதவி ஏற்ற பின்னரும் அவரை கொல்ல சதி நடந்துள்ளது. இந்தாண்டில் மட்டும் அதிபர் டிரம்ப்புக்கு அருகே நடந்த 4வது பாதுகாப்பு அத்துமீறல் சம்பவமாகும். கடந்த பிப்ரவரியில் டிரம்பின் விடுமுறை இல்லத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபர் சுட்டு கொல்லப்பட்டார்.
கடந்த மாதம் வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் விருந்து நிகழ்ச்சியில் ஒருவர் அத்துமீறி நுழைய முயற்சித்தார்.

துப்பாக்கிசூடு சத்தம் கேட்டதும் அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆகியோரை பாதுகாப்பு படை வீரர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியே அழைத்து சென்றனர். அது நடந்து சில நாட்களுக்கு பின் வெள்ளை மாளிகை அருகே பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்ட மைக்கேல் மார்க்ஸ் என்பவரை பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

Tags : President Trump ,White House ,Washington ,United States ,Secret Service ,Washington… ,
× RELATED ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல்...