திருவனந்தபுரம்: கோழிக்கோடு அருகே உள்ள வளையம் என்ற பகுதியை சேர்ந்தவர்கள் சஞ்ஜிஷ், சந்திரிகா (56). இவர்கள் இருவரும் கட்டிடத் தொழிலாளிகள் ஆவர். நேற்று முன்தினம் இவர்கள் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி அருகே உள்ள பானூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பணிக்காக சென்றிருந்தனர். அந்த வீட்டில் 2வது மாடியில் ஓடுகளை மாற்றும் பணியில் சந்திரிகா ஈடுபட்டிருந்தார். சஞ்ஜிஷ் கீழே ஒரு வேனின் மேல் நின்றுகொண்டு கயிறு கட்டி ஓடுகளை மேலே ஏற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது சந்திரிகா எதிர்பாராதவிதமாக கால் தவறி 2வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். தற்செயலாக அதை கவனித்த சஞ்ஜிஷ் சமயோசிதமாக செயல்பட்டு சந்திரிகாவை தாங்கிப் பிடித்து காப்பாற்றினார். இதில் லேசான காயமடைந்த சந்திரிகாவை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
