×

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் சென்று தாக்கும் ஒரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணை ஏவி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 4 பேர் பலி, 50 பேர் படுகாயம்

 

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ஒரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். 50 பேர் படுகாயமடைந்தனர். ரஷ்யாவுக்கும்,உக்ரைனுக்கும் 4 ஆண்டாக போர் நடந்து வருகிறது. ரஷ்யாவின் ஸ்டாரோபில்ஸ்க் பகுதியில் உள்ள மாணவர் விடுதி மீது உக்ரைன் நடத்திய டிரோன்களை ஏவி நடத்திய தாக்குதலில் 18 பேர் பலியாகினர்.அந்த தாக்குதலுக்கு உறுதியாக பதிலடி தருவோம் என்று ரஷ்ய அதிபர் புடின் சூளுரைத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ் நகரை குறி வைத்து ரஷ்யா டிரோன்கள் ஏவியும், வுகணைகளை வீசி தொடர்ச்சியான தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல்களில் ஒரேஷ்னிக், இஸ்கந்தர், கின்ஷால் மற்றும் சிர்கான் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. இதில், ஒரேஷனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஒலியின் வேகத்தை விட 10 மடங்கு வேகத்தில் சென்று தாக்கும் திறன் கொண்டவை.

உக்ரேனிய ராணுவத் தலைமையகம், விமானத் தளங்களை தாக்குதலில் குறிவைத்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.
ரஷ்யா ஏவிய 600 டிரோன்களில்,549 டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டது. அதே போல், உக்ரைன் பகுதியில் வந்த 90 ஏவுகணைகளில் 55 ஏவுகணைகள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்தது.

தாக்குதல்களால் நகரம் முழுவதும் புகை சூழ்ந்த நிலையில், இரவு முழுவதும் எச்சரிக்கை ஒலிப்பான்கள் ஒலித்தன. நகர மையத்திற்கு அருகிலும், அரசு கட்டிடங்களுக்கு அருகிலும் சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தங்கள் எழுந்தன.ரஷ்யாவின் அசுரத்தனமான தாக்குதல்களால் அதிர்ச்சியுற்ற மக்கள் கீவ் நகரின் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்தனர்.

ரஷ்யா நடத்திய இந்த தாக்குதலில் 4 பேர் பலியாகினர். 50 பேர் படுகாயமடைந்தனர். தலைநகர் பகுதியில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் கடுமையான சேதம் பதிவாகியுள்ளது என்று கீவ் ராணுவ நிர்வாகத் தலைவர் டைமூர் தகாசென்கோ தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்த தாக்குதலில் ஒரேஷ்னிக் ஹைப்பர் சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து சமூக ஊடகங்களில் அவர் பதிவிடுகையில், அணு ஆயுதத்தை ஏந்தி செல்லும் திறன் உடைய ஒரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணை கீவ் அருகில் உள்ள பிலா செர்கேவா நகரை தாக்கியது என குறிப்பிட்டுள்ளார்.

* பல இலக்குகள் மீது தாக்குதல்

ஒரேஷ்னிக் ஏவுகணை பல இலக்குகளை குறி வைத்து தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை ஒலியை விட 10 மடங்கு அதிக வேகத்தில் செல்லக்கூடியது. மேலும் நிலத்துக்கு அடியில் உள்ள பதுங்கு குழிகளையும் தாக்கி அழிக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Russia ,Ukraine ,Kiev ,Staropilsk ,Russia… ,
× RELATED ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல்...