அடுத்தடுத்து அரங்கேறும் கொலைகள்: கொலை நகரமாகிறது கோவை

கோவை: கோவை மாநகரில் மூதாட்டிகளை தொடர்ந்து சிறுவர், சிறுமிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலை நகரமாகும் கோவையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கோவையில் சில நாட்களுக்கு முன்பு தனிமையில் வசித்து வந்த 3 மூதாட்டிகள் நகைக்காக அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து இந்த ஒரே வாரத்தில் சிறுவன் ஒருவரும், சிறுமி ஒருவரும் கொலை செய்யப்பட்டு இருப்பது தமிழகத்தையே உலுக்கி உள்ளது.

கோவை இருகூர், நியூ காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா (39). இவரது, மூத்த மகன் திவிஷ் (13) ஏ.ஜி.புதூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்த போது பாதியில் படிப்பை நிறுத்தினார். இந்நிலையில், கடந்த 15ம் தேதி மதியம் மாயமான சிறுவன் 18ம் தேதி காலை இருகூர் தண்டவாளம் அருகே உள்ள தரைபாலம் பகுதியில் சேற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டான்.

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து சிறுவனுடன் மீன் பிடிக்க சென்ற அவரது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுவன் மற்றும் 8ம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுவன் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள், திவிஷை முன்விரோதத்தில் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

அதே நாளில் சூலூரில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு இருந்தார். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகன் சரவணன் என்பதும், கொலை செய்தது அவருடன் வேலை பார்த்து வந்த கோகுல் (23), ஹரிஷ் (29) என்பதும் தெரியவந்தது.

அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலைகள் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது சிறுமி ஒருவர் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் அமைதிப் பூங்காவாக திகழ்ந்த கோவை தற்போது கொலை நகரமாக மாறிவிட்டது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Related Stories: