அரசியல் கட்சியினர் திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுத்தால் தெரிவிக்க வேண்டும்

நாமக்கல், மார்ச் 4: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தை விதிகள் குறித்து திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் கலெக்டர் மெகராஜ் பேசியதாவது: ஓட்டல்களில் தங்கும் நபர்களின் முழுவிபரம், வருகைக்கான காரணத்தை பதிவேட்டில் பதிய வேண்டும். அந்த விபரங்களை காவல் துறையிடம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் பற்றி சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக தேர்தல் அதிகாரிக்கு தகவல் அளிக்க வேண்டும். திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் சிறப்பு நிகழ்ச்சி என்ற பெயரில் பொதுமக்களை கூட்டி பரிசு பொருட்கள் ஏதும் விநியோகிக்கக் கூடாது. மேலும், காது குத்து போன்ற விசேஷங்களை நடத்தி, பொதுமக்களுக்கு எவ்வித பொருட்களும் வழங்கக்கூடாது. அன்னதானம் என்ற பெயரில், உணவு விநியோகம் நடைபெற அனுமதிக்க கூடாது.

திருமண மண்டபங்கள் உண்மையாகவே திருமண நிகழ்வுகளுக்காக பதிவு செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்து, அதற்கான முழுப்பொறுப்பை மண்டப உரிமையாளரே ஏற்க வேண்டும். பணப்பட்டுவாடா செய்தல் போன்ற நிகழ்வுகள் தெரிய வந்தால், உடனடியாக தெரிவிக்க வேண்டும்.  அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள், தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு திருமண மண்டபங்களை பதிவு செய்தால் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

கூட்டத்தில் ஏடிஎஸ்பி ராமு, பிஆர்ஓ சீனிவாசன், தேர்தல் தாசில்தார் சுப்ரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சேந்தமங்கலம் : கொல்லிமலை வாழவந்திநாடு காவல் நிலையத்தில் அனைத்து ஓட்டல்,  தங்கும் விடுதி, ரிசார்ட்ஸ் உரிமையாளர்கள், மேலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம், எஸ்ஐ மணி தலைமையில் நடந்தது. கூட்டத்தில்  சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், கொல்லிமலை எல்லைக்குட்பட்ட தங்கும்  விடுதிகள், ஹோட்டல்களில் பணியாற்றும் பணியாளர்கள், அரசால் வழங்கப்பட்ட  புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கொண்டு, சம்பந்தப்பட்ட காவல்  நிலையத்தில் நன்னடத்தை சான்று பெற்றவுடன் பணியமர்த்த வேண்டும். தங்கள்  விடுதிகளில் தங்கும் வாடிக்கையாளர்கள் குறித்த விபரங்களை, முறையாக  பதிவேட்டில் பதிவுசெய்து, அந்த வாடிக்கையாளர்கள் குறித்த விவரத்தை, தினமும்  காலை 7மணிக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். என அறிவுறுத்தப்பட்டது. இந்த  கூட்டத்தில் கொல்லிமலையில் உள்ள  அனைத்து தங்கும் விடுதி, ஓட்டல்களின் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>