×

திருச்சியில் உள்ள முக்கிய கோவில்களில் அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் இன்று (24.05.2026) திருச்சிராப்பள்ளி மாவட்டம், மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில், திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயில் மற்றும் திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு நேரில் சென்று அவற்றின் நிர்வாகம் மற்றும் பக்தர்களுக்கான வசதிகள், பிரசாத விற்பனை நிலையம் ஆகியற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலுக்கு புதிய அம்பாள் மரத்தேர் உருவாக்கிடும் பணி உபயதாரர் நிதி ரூ.57.80 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது. அப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, திருத்தேர் பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயிலுக்கு சென்று திருக்கோயில் நிர்வாகம், யானை பராமரிப்பு மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். திருக்கோயில் பிரசாத விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் மற்றும் பிரசாதங்கள் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) வகுத்துள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்பட்டுள்ளதா எனவும், உணவு பொருட்களின் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடப்பட்டுள்ளதாக எனவும் பரிசோதித்தார். அவ்வாறு குறிப்பிடப்படாததை கண்டறிந்த அமைச்சர் அந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது எனவும், இது தொடர்பாக சம்மந்தப்பட்ட பிரசாத கடை ஒப்பந்ததாரரிடமிருந்து உரிய விளக்கம் பெற வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் மாண்புமிகு அமைச்சர் அவர்கள், திருக்கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொட்டியில் (RO Unit) குடிநீரின் TDS அளவை கணக்கீடு செய்து, அது குறைவாக இருந்ததை கண்டறிந்து, அதில் இயற்கை கனிமச் சத்துக்கள் மற்றும் ஊட்டச் சத்துக்கள் போதுமான அளவில் இல்லாமல் இருக்கக்கூடும் என்பதால் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொட்டியினை தொடர்ச்சியான கால இடைவெளியில் பராமரிப்பு மேற்கொள்ளவும், அதற்கென தனியாக பதிவேடுகளை பராமரிக்கவும் உத்தரவிட்டார். திருகோயில் வளாகத்திலுள்ள கழிப்பறைகளை தினமும் குறைந்தபட்சம் ஐந்து முறை சுத்தம் செய்யப்பட வேண்டுமென்றும், ஒவ்வொரு முறை சுத்தம் செய்யும் போதும் சுத்தம் செய்த நேரம் மற்றும் பணியாளர் விவரங்களுடன் கூடிய தனிப் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். திருக்கோயிலில்களில் பக்தர்களின் காலணிகளை பாதுகாத்திட அமைக்கப்பட்டுள்ள இலவச காலணி பாதுகாப்பு மையங்களை சிறந்த முறையில் பராமரித்திடவும் அறிவுரைகளை வழங்கினார்.

இத்திருக்கோயில் சார்பில் ரூ. 5.26 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து திருக்கோயில் நிர்வாகங்களும் பிரசாதம் விற்பனை நிலையங்கள், அன்னதான சமையலறைகள், குடிநீர் வசதிகள், கழிப்பிட வசதிகள் மற்றும் பொதுப் பயன்பாட்டு வசதிகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டுமெனவும், பிரசாத விற்பனை நிலையங்களில் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதனை தொடர்ச்சியாக ஆய்வு செய்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவது அல்லது காலாவதி தேதி குறிப்பிடப்படாத பொருட்களை விற்பனை செய்வது போன்ற குற்றச்செயல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால், பிரசாத கடை ஒப்பந்ததாரர்கள் மற்றும் கடை நடத்துபவர்களிடம் விளக்கம் கோரப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டுமென்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு கண்டறியப்பட்ட பிரசாத கடையின் விற்பனை நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படுவதோடு, இது குறித்து அமைச்சர் அலுவலகத்திற்கு உடனடியாக தெரிவிக்கப்பட வேண்டுமென்றும், தகுதியான அலுவலரின் அனுமதி பெற்ற பின்னரே அந்தக் கடைகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து திருக்கோயில்களிலும் FSSAI வழிகாட்டுதல்கள், உணவுப் பாதுகாப்பு தரநிலைகள், சுகாதார நடைமுறைகள் மற்றும் குடிநீர் தரக் கட்டுப்பாடுகள் ஆகியவை கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும். இதனை சம்மந்தப்பட்ட இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், செயல் அலுவலர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு, தொடர்ந்து தூய்மை பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உறுதி செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயிலுக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் ராஜகோபுர கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின் போது மண்டல இணை ஆணையர் சு. ஞானசேகரன், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் / செயல் அலுவலர் செ. சிவராம்குமார், மலைக்கோட்டை திருக்கோயில் உதவி ஆணையர் அருள்செல்வன், திருவானைக்காவல் திருக்கோயில் உதவி ஆணையர் கி. உமா, மண்டல செயற் பொறியாளர் முத்து ஜெயம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Ministry of Trustees ,Trishi ,Chennai ,Minister of ,Hindu ,Religious Affairs ,C. RAMESH ,THIRUCHIRAPALLI ,DISTRICT ,MALAIKOTA ARULMIGU ,THAYUMANASWAMI ,THIRUVANIKAVAL ARULMIGU ,JAMBUKESWARAR ,THIRUVALGARA ARULMIGU BUNDIKATSA ,
× RELATED விமானநிலைய அலுவலக அறையில் பாதுகாவலர் தூக்கிட்டு தற்கொலை