லண்டன்: லண்டனில் இந்தி நடிகை சோனம் கபூர் மற்றும் அவரது கணவர் ஆனந்த் அஹூஜா (தொழிலதிபர்) ஆகியோர் 51.4 கோடி ரூபாய் மதிப்பில் 5 அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகை சோனம் கபூர் மற்றும் அவரது கணவர் ஆனந்த் அஹூஜா ஆகியோர் லண்டனில் உள்ள நாட்டிங் ஹில் பகுதியில் ஏற்கனவே வசித்து வருகின்றனர். அங்குள்ள அவர்களின் பிரம்மாண்ட இல்லத்திற்கு அருகில், சுமார் 4 மில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் சுமார் 51.4 கோடி ரூபாய்) செலவில் 5 அடுக்குமாடி குடியிருப்புகளை அவர்கள் வாங்கியுள்ளனர். இந்த குடியிருப்புகள் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் தங்குமிடத்திற்காக வாங்கப்பட்டதாக ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த குடியிருப்புகளை வாங்கிய நிறுவனம், தங்களின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தால், அவற்றை சமூக நல குடியிருப்புகளாக மாற்றிவிடுவோம் என்று உள்ளூர் மக்களை மிரட்டியதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், நடிகை சோனம் கபூர் தரப்பில், ‘இந்த குடியிருப்புகளை வாங்கிய நிறுவனத்துடன் கபூர் குடும்பத்திற்கு எந்தவிதமான நேரடித் தொடர்பும் இல்லை; இது முழுக்க முழுக்க முதலீடு நோக்கில் வாங்கப்பட்ட சொத்துக்கள் மட்டுமே’ என்று கூறப்பட்டது. முன்னதாக, ஆனந்த் அஹூஜாவின் தந்தை ஹரிஷ் அஹூஜா, 2024ம் ஆண்டில் நாட்டிங் ஹில் பகுதியில் 21 மில்லியன் பவுண்ட் (சுமார் 270 கோடி ரூபாய்) மதிப்பில் 8 அடுக்குகள் கொண்ட பிரம்மாண்ட மாளிகையை வாங்கினார்.
அந்த மாளிகையை சீரமைக்க மட்டும் சோனம் கபூர் தம்பதியினர் இதுவரை 4.7 மில்லியன் பவுண்ட் (சுமார் 60.4 கோடி ரூபாய்) செலவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சோனம் கபூர் தம்பதியினர் தங்கள் இரண்டு குழந்தைகளான வாயு மற்றும் ருத்ரலோக் ஆகியோருடன் லண்டனில் வசித்து வருவதுடன், மும்பை மற்றும் டெல்லியிலும் சொத்துக்களை வைத்துள்ளனர்.
