கலெக்டர் அலுவலகத்தில் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி, மார்ச் 4: கிருஷ்கிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நேற்று வங்கியாளர்களுடன் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தல் நடத்தை விதிமுறைகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ₹50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணமின்றி பணம் எடுத்துச் சென்றால் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படுகிறது. பொதுமக்கள் வங்கிக் கணக்கில் ₹10 லட்சத்திற்கு மேல் பணபரிமாற்றம் செய்வதை, வருமான வரித்துறையின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலரால் கண்காணிக்கப்பட உள்ளது. தேர்தல் காலங்களில் சந்தேகப்படும் வகையில், ₹1 லட்சத்திற்கு மேல் பணபரிமாற்றம் செய்யும் போது அந்த வங்கிக் கணக்கு, முழு கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படும்.

வங்கி கணக்கிலிருந்து ₹1 லட்சத்திற்கு மேல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது, சம்மந்தப்பட்ட நபர் எதற்காக பண பரிவர்த்தனை மேற்கொள்கிறார் என்ற விவரத்தை வருமான வரித்துறையினரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால், சந்தேகப்படும் பண பரிமாற்றங்கள் மேற்கொள்ளும் நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அறிவுரைகளை பொதுமக்கள், தொழில் முனைவோர்கள், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர், முறையான ஆவணங்களுடன் பண பரிவர்த்தனைகளை வங்கிகள் மூலம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன் மற்றும் அனைத்து வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: