மதுரை: படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கோரி மதுரையில் ‘காக்ரோச்’ என்ற பெயரில் இளைஞர்கள் பேரணி சென்றனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வழக்கு விசாரணை ஒன்றில், ‘வேலையில்லா இளைஞர்கள் கரப்பான் பூச்சிகளை போல மாறி மீடியா, சமூக ஊடகவியளார்கள், தகவல் அறியும் ஆர்வலர்களாகி எல்லாரையும் தாக்குகிறார்கள் என்றார். இது சர்ச்சையான நிலையில், இணையத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) என்ற நையாண்டி குழு தொடங்கப்பட்டது. நையாண்டி கட்சியான சிஜேபிக்கு கோடிக்கணக்கான இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வழங்க கோரியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் மதுரையில் ‘காக்ரோச்’ என்ற பெயரில் இளைஞர்கள் இன்று பேரணி சென்றனர். காந்தி மியூசியத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி தமுக்கம் மைதானம் வரை நடந்தது. இதில் மாநகர் புறநகர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், காக்ரோச் ஜனதா கட்சியினர் உட்பட ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
