ஓசூரில் வாலிபர் எரித்து கொலை மாயமானோர் பட்டியல் எடுத்து தீவிர விசாரணை

ஓசூர், மார்ச் 4:  ஓசூர் அருகே அந்திவாடியில், எரித்து கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? என்பதை கண்டறிய, மாயமானவர்களின் பட்டியலை கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஓசூர்-தளி சாலை அந்திவாடி கிராம விளையாட்டு மைதானத்தின் பின்புறம், நேற்று முன்தினம் காலை, சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கருகிய நிலையில் கிடந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடம் சென்ற மத்திகிரி போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர் விசாரணையில், மர்ம நபர்கள் அந்த வாலிபரை கடத்தி வந்து, சரமாரியாக அடித்து உதைத்து தீ வைத்து எரித்து கொலை செய்து விட்டு, சடலத்தை வீசி விட்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது. அவர் யார்? பெண் விவகாரத்தில் எரித்து படுகொலை செய்யப்பட்டாரா? அல்லது சொத்து தகராறில் தீர்த்து கட்டினரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தமிழக எல்லையோர பகுதியில் உள்ள அத்திப்பள்ளி, சர்ஜாபுரம், சந்தாபுரம், எப்பக்கோடி ஆகிய பகுதிகளில் உள்ள காவல்நிலையங்களில் பதிவாகியுள்ள காணாமல் போனவர்களின் விபரங்களை சேகரித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல், சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>