தேன்கனிக்கோட்டை பகுதியில் காட்டு தீயை அணைக்க வனத்துறையினர் தீவிரம் தேன்கனிக்கோட்டை,

மார்ச் 4: தேன்கனிக்கோட்டை பகுதியில் காட்டு தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஓசூர் வனக்கோட்டத்தில் தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, அஞ்செட்டி உள்ளன. பல்வேறு விலங்குகள் மற்றும் அரிய வகை மரங்கள் நிறைந்து காணப்படும் இந்த வனத்திற்கு கர்நாடகாவில் இருந்து யானைகள் அதிகம் வந்து செல்கின்றன. வனப்பகுதியில் கோடை காலத்தின் போது, தண்ணீரின்றி வன விலங்குகள் ஊருக்குள் வந்து செல்வது உண்டு. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதியின் சில இடங்களில் காட்டு தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீயால் அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து வருகிறது.

இதையடுத்து வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் குழுக்களாக சென்று தீயை அணைத்து வருகின்றனர். மேலும் சாலையோரங்கள், கிராம பகுதிகள் வழியாக செல்லும் காடுகளில், தீ தடுப்பு கோடுகள் அமைத்து வருகின்றனர். ஆனால் வனப்பகுதியில் ஆங்காங்கே பற்றி எரியும் தீயால் மரங்கள் எரிந்து வருகிறது. இதை தீயணைப்பு துறையினர் அணைத்து வருகின்றனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘தற்போது கோடை காலம் என்பதால் அடிக்கடி காட்டு தீ பற்றி வருகிறது. இதை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். மேலும் தீயணைப்பு வாகனத்தை வனப்பகுதியில் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிலர் வனப்பகுதியில் நுழைந்து தீ வைத்து சென்று விடுகின்றனர். இதை கண்காணிக்க குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வனத்திற்குள் அத்துமீறி  வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.

Related Stories: