×

என்எல்சி சுரங்க விரிவாக்கம் எதிர்த்து மக்கள் மறியல்: போராடியவர்கள் வலுக்கட்டாயமாக கைது

 

வடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் சுரங்கங்களை விரிவாக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக, வீடு, நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. நெய்வேலி, புவனகிரி, விருத்தாசலம் பகுதி கிராம மக்கள் என்எல்சி விரிவாக்கத்துக்கு வீடு, நிலங்களை வழங்க மாட்டோம் என கூறினர். மேலும், விளை நிலங்களுக்கு உரிய இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை உள்ளிட்ட கோரிக்கையை முன் வைத்து பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் தென்குத்து கிராமத்தில் கல்குவாரி நடைபெற்ற இடத்தை என்எல்சி இந்தியா நிறுவனம் அதன் உரிமையாளரிடம் இருந்து வாங்கிவிட்டதாம். அதன் அருகே உள்ள அரசு புறம்போக்கு இடத்தை கையகப்படுத்த என்எல்சி அதிகாரிகள் கடந்த 10 நாட்களுக்கு முன் வந்தனர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, சுரங்க விதிகளின்படி 500 மீட்டர் தொலைவில் விரிவாக்க பணியை தொடங்குமாறு கூறினர். இதையடுத்து, என்எல்சி அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில் நேற்று தென்குத்து கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து என்எல்சி அதிகாரிகள் தென்குத்து ஊருக்கு அருகில் 20 மீட்டர் தொலைவில் கனரக இயந்திரங்கள் மூலம் பள்ளம் வெட்டும் பணியை தொடங்கினர். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், தென்குத்து கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் வடலூர் ஆபத்தாரணபுரம் அருகே திரண்டு, என்எல்சி இந்தியா நிறுவனத்தை கண்டித்து சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து அங்கு வந்த வடலூர், நெய்வேலி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளானது. இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட 11 பெண்கள் உள்ளிட்ட 34 பேரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று காவல் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்று தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தகவல் அறிந்து மண்டபத்திற்கு வந்த நெய்வேலி எம்எல்ஏ சொரத்தூர் ராஜேந்திரன், நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணனிடம் ஆட்சியர் தலைமையில் சுரங்க விதிகளின் அடிப்படையில் என்எல்சி நிர்வாகம், மாசு கட்டுப்பாடு வாரியம், தென்குத்து பொதுமக்கள் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்ைனக்கு முடிவு காண வேண்டும் என்று கூறினர்.

Tags : NLC ,Vadalur ,NLC India Company ,Neyveli, Cuddalore district ,Neyveli ,Bhuvanagiri ,Virudhachalam ,
× RELATED மருத்துவமனைகளுக்கு தடையில்லா...