கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தி சரமாரி தாக்கியதில் மயக்கம்: பெண் இறந்து விட்டதாக நினைத்து 19 சவரன், ரூ.1.25 லட்சம் கொள்ளை: திருப்பத்தூர் அருகே வீட்டில் புகுந்து முகமூடி கும்பல் அட்டூழியம்

 

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர், பாரஸ்ட் பங்களா பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின், தர்மபுரியில் மருத்துவ பிரதிநிதியாக பணியாற்றுகிறார். இவரது மனைவி ராஜதிலகம்(40). இவர் அப்பகுதியில் கோழி பண்ணை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ராஜதிலகம் கோழிகளுக்கு தீவனம் வைக்க கொட்டகைக்கு சென்றுள்ளார்.

பின்னர் அவர் வீட்டிற்குள் வந்தபோது, ஏற்கனவே உள்ளே மறைந்திருந்த 4 முகமூடி கொள்ளையர்கள் ராஜதிலகத்தை அசைய விடாமல் இறுக்கி பிடித்து கத்தியை கழுத்தில் வைத்து அழுத்தி சத்தம்போட்டால் கழுத்தறுத்து கொன்றுவிடுவோம் என மிரட்டி உள்ளனர். அவர் அணிந்திருந்த 9 சவரன் நகையை பறித்துள்ளனர். தொடர்ந்து ராஜதிலகத்தை சரமாரி தாக்கி வீட்டில் வேறு எங்கு நகை இருக்கிறது என கேட்டுள்ளனர். தொடர்ந்து வீட்டில் வைத்திருந்த 10 சவரன் நகைகள், ரூ.1.25 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். இதற்கிடையில் முகமூடி கும்பல் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தி சரமாரி தாக்கியதில் ரத்த காயமடைந்த ராஜதிலகம் மயங்கி விழுந்தார்.

இதனால் கொள்ளையர்கள் அவர் இறந்துவிட்டதாக நினைந்து கழுத்தில் கிடந்த மற்றொரு சங்கிலியை விட்டுவிட்டு தப்பி சென்றனர். பின்னர் இரவு 11.30 மணியளவில் மயக்கம் தெளிந்து எழுந்த ராஜதிலகம், தர்மபுரியில் உள்ள கணவருக்கு போன் செய்து கதறி அழுதபடி தகவல் தெரிவித்தார். இதுகுறித்து அவரது கணவர் அகஸ்டின் உடனடியாக குருசிலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் பாழடைந்த பாரஸ்ட் பங்களா அருகே உள்ள வண்ணார காளியம்மன் கோயில் வரை சென்று நின்றுவிட்டது. அங்கு ஒரு மர்ம கும்பல் அமர்ந்து மது குடித்துள்ளதும், பின்னர் அங்கிருந்து கை உறை, முகமூடி அணிந்து, கையில் ரசாயன பவுடர் தடவிக்கொண்டு புறப்பட்டு கொள்ளையை அரங்கேற்றியதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து 4 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

Related Stories: