மாநில ரோல் பால் போட்டி திண்டுக்கல் அணிகள் சாம்பியன்

சின்னாளபட்டி, மார்ச் 3: சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு ரோல் பால் கழகம் சார்பில் மாநில அளவிலான 8ம் ஆண்டு சீனியர் பிரிவு சாம்பியன்ஷிப் சுழற்கோப்பை போட்டி நடந்தது. 2 நாட்கள் நடந்த இப்போட்டியில் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கடலூர், வேலூர், கோவை, திருச்சி மாவட்டங்களில் இருந்து 10க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. ரோல் பால் கழக மாநில செயலாளர் சுப்பிரமணியம் போட்டிகளை துவங்கி வைத்தார். இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் திண்டுக்கல், மதுரை அணிகள் மோதின. இதில் திண்டுக்கல் அணி 5:4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதலிடம் பிடித்த திண்டுக்கல் அணிக்கு சாம்பியன்ஷிப் சுழற்கோப்பை, விருதுகள் வழங்கப்பட்டன. 2,3,4ம் இடங்கள் பிடித்த மதுரை, வேலூர், சிவகங்கை அணிக்கு கோப்பைகள், பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதேபோல் மகளிர் பிரிவில் முதலிடம் பிடித்த திண்டுக்கல் அணிக்கு சாம்பியன்ஷிப் சுழற்கோப்பை, விருதுகள் வழங்கப்பட்டன. இப்போட்டிகளில் சிறப்பாக விளையாடிய 12 வீரர்கள், 12 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் மார்ச் 11 முதல் 15 தேதி வரை ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கவுள்ளனர். ஏற்பாடுகளை மாநில தலைவர் தேவநாதன், மாநில பொருளாளர் பூபதி, மாநில துணை தலைவர் ராபின், மாவட்ட செயலாளர் பிரேம்நாத் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Related Stories:

>