×

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழா 10 ஆயிரம் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

நத்தம், மார்ச் 3: நத்தம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவில் சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான நத்தம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். இந்த ஆண்டு திருவிழா கடந்த பிப்.15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து வந்து கோயிலில் மஞ்சள் காப்பு கட்டி 15 நாட்கள் விரதம் துவங்கினர். அன்றிரவு கம்பம் அம்மன் குளத்தில் இருந்து நகர் வலமாக கொண்டு வரப்பட்டு கோயிலில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது. தொடர்ந்து 19, 23, 26ம் தேதிகளில் ஒவ்வொரு நாளும் மாரியம்மன் மின்ரதத்தில் மயில், சிம்மம், அன்னம் வாகனங்களில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்குதல் நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தனர். தொடர்ந்து கழுகுமரம் ஊன்றப்பட்டு, அதில் இளைஞர்கள் ஆர்வமுடன் ஏறினர். பின்னர் பூக்குழி இறங்குதல் நடந்தது. இதில் நத்தம் மட்டுமின்றி திண்டுக்கல், மதுரை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வந்திருந்த சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சிலர் கைக்குழந்தைகளுடனும் வந்திறங்கியது காண்போரை பரவசப்படுத்தியது தொடர்ந்து கம்பம் அம்மன் குளத்தில் கொண்டு போய் விடப்பட்டது. இன்று காலை அம்மன் மஞ்சள் நீராடுதல் நடக்கும். இரவு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து, நகர் வலம் வந்து கோயில் இருப்பிடம் போய் சேரும். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Natham Mariamman Temple Masi Festival ,
× RELATED நத்தம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழா பூப்பல்லக்கில் அம்மன் வீதியுலா