×

மணலி புதுநகர் அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை: 14 மணிநேரத்தில் அடுத்தடுத்து 2 கொலைகள்

திருவொற்றியூர்: சென்னை மணலி புதுநகர் அருகே விச்சூரை சேர்ந்தவர் விஜயகுமார் (25). இவர் பிரபல ரவுடி. இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் உள்ளது. இன்று காலை விச்சூர் சாலையில் பைக்கில் வந்துள்ளார். அந்த சமயத்தில் எதிர்புறமாக நடந்துவந்த ஒரு வாலிபர் திடீரென்று தான் வைத்திருந்த அரிவாளை எடுத்து விஜயகுமாரின் மார்பில் சரமாரியாக குத்தியுள்ளார். விஜயகுமார் பைக்கில் இருந்து விழுந்து துடித்தபோதும் அவரது தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு ஓடிவிட்டார். இதில் ரத்தவெள்ளத்தில் விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் மணலி புதுநகர் போலீசார் விரைந்துவந்து விஜயகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். ரவுடி விஜயகுமார், அவரது அண்ணன் அஜித்குமார் என்ற கருப்பு அஜித்குமார் (28) ஆகியோர் பிரபல ரவுடிகள். ஓராண்டு முன்பு விச்சூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் ஒரு உடற்பயிற்சி மையத்தில், கஞ்சா வியாபாரம் தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் ஒரேநேரத்தில் 3 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அஜித்குமார், விஜயகுமார் ஆகியோர் முக்கிய நபர்களாக கருதப்பட்டனர். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட அஜித்குமார், விஜயகுமார் ஜாமீனில் வெளியே வந்தனர். கண்ணம்பாளையத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பழிக்குப்பழியாக அஜித்குமார், விஜயகுமார் ஆகியோரை கொலை செய்ய நண்பர்கள் திட்டமிட்டு இருந்தனர்.

இதுகுறித்து சக ரவுடிகள் மூலம் தெரிந்துகொண்ட அஜித்குமார், விஜயகுமார் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக இருந்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கூலி வேலை செய்து தங்கியிருந்துள்ளனர். விச்சூரில் அடுத்த சில நாட்களில் திருவிழா நடைபெற உள்ளது. இவரது மூத்த அண்ணன் ஜெய் என்பவரின் மகளுக்கு 2 நாட்களுக்கு முன்பு பிறந்தநாள். இதனால் விச்சூர் பகுதியை ஒரு முறை பார்த்துவிட்டு, தன்னுடைய மூத்த அண்ணன் மகளையும் வாழ்த்திவிட்டு வரலாம் என்று இன்று காலை விஜயகுமார் வந்துள்ளார். அனைவரையும் பார்த்துவிட்டு பைக்கில் செல்லும்போது கண்ணம்பாளையத்தில் உயிரிழந்தவர்களின் நண்பர் ஒருவர் விச்சூரில் உள்ள தனது உறவினரை பார்க்க வந்துள்ளார். அப்போது விஜயகுமார் மூத்த அண்ணன் ஜெய் என்பவரின் வீட்டிற்கு வந்திருப்பது தெரிந்ததும் உடனடியாக அந்த வாலிபர் அரிவாளை எடுத்துக்கொண்டு விஜயகுமாரின் வீட்டுக்கு அருகாமையில் சாலை ஓரம் காத்திருந்துள்ளார். அப்போது விஜயகுமார் வந்ததும் வெட்டிவிட்டு தப்பிவிட்டார். இவ்வாறு தெரியவந்துள்ளது.

இதையடுத்து விச்சூர் சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் கொலையாளியை தேடி வருகின்றனர்.

தொடரும் கொலை
சென்னை மணலி புதுநகரைச் சேர்ந்த பிரசாந்த் என்ற பிரபல ரவுடி நேற்றிரவு பழைய நாபாளையம் பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது அண்ணன் நவீன் படுகாயத்துடன்சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது ஏற்கனவே நடைபெற்ற கொலைக்கு பழிக்கு பழி தீர்க்க நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதில் சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க போலீசாருக்கு விசாரணை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில்தான், ரவுடி பிரசாந்த் படுகொலை செய்யப்பட்ட 14 மணி நேரத்தில் மற்றொரு கொலை நடந்துள்ளது. அடுத்தடுத்து 2 கொலைகள் நடந்துள்ளதால் மணலி புதுநகர் பகுதியில் மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர். இதன்மூலம் சட்டம், ஒழுங்கு பெரும் கேள்வி குறியாகி உள்ளது.

Tags : Rawudi massacre ,Manali Pudunagar ,Vijayakumar ,Vichur ,Manali Pudunagar, Chennai ,Rawudi ,
× RELATED குன்றத்தூர் அருகே தனியார்...