×

குமரி மாவட்டத்தில் 122 பள்ளிகளில் இலவச கல்வி திட்டத்தில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை: முதன்மை கல்வி அதிகாரி ெதாடங்கி வைத்தார்

 

நாகர்கோவில், மே 23 : நாகர்கோவில் குமரி மெட்ரிக் பள்ளியில் 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான குலுக்கல் முறையை முதன்மை கல்வி அதிகாரி நேற்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள சிறுபான்மையற்ற சுயநிதி தனியார் பள்ளிகளில், நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்காக 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இலவச கல்வி வழங்கும் கல்வி உரிமைச் சட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு 2026 – 2027ஆம் கல்வியாண்டிற்கான எல்.கே.ஜி மற்றும் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 20ம் தேதி தொடங்கி, கடந்த மே 18ம் தேதியுடன் நிறைவடைந்தது. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விடக் கூடுதலாக விண்ணப்பங்கள் வந்துள்ள பள்ளிகளில், மாணவர்களை தேர்வு செய்வதற்கான குலுக்கல் முறை நேற்று (22ம்தேதி) நடைபெற்றது. மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் பெற்றோர் முன்னிலையில் வெளிப்படையாக குலுக்கல் நடந்தன. அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களை கொண்ட கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு இருந்தன. குமரியில் மொத்தம் 122 பள்ளிகளுக்கான குலுக்கல் நேற்று நடைபெற்றது. குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான இறுதி சேர்க்கை செயல் முறைகள் வரும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறும். வரும் 29ம் தேதிக்குள் பள்ளிகள் இறுதி சேர்க்கை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தனியார் பள்ளிகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரை இலவசமாக படிக்கலாம். மாணவர்களிடம் சீருடை, புத்தகங்கள் அல்லது இதர காரணங்களைக் கூறி தனியார் பள்ளிகள் எவ்விதக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது. பெற்றோர்களிடம் சட்டவிரோதமாகப் பணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடுமையான விசாரணை நடத்தப்பட்டு, அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நலிவடைந்த பிரிவினர் என்பதன் கீழ் விண்ணப்பிக்கக் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். வயது 3 முதல் 4 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். 1ம் வகுப்புக்கு 5 முதல் 6 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். ஆதரவற்ற குழந்தைகள், எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இச்சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கான குலுக்கல் முறையை நாகர்கோவில் கோட்டார் குமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தொடங்கி வைத்தார். இந்த பள்ளியில் 71 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் தகுதியான விண்ணப்பம் 65 ஆகும். இதில் யுகேஜிக்கு 9 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர். 5 பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ராஜ தங்கம் கண்காணிப்பு அலுவலராக இருந்து கண்காணித்தார். பள்ளி தாளாளர் சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags : Kumari district ,Principal Educational Officer ,Nagercoil ,Kumari Matriculation ,School ,Tamil Nadu ,
× RELATED வேலூர் செங்கல்சூளைகளில் மாமூல் கேட்டு தவெக நிர்வாகிகள் மிரட்டல்