செங்கோட்டை, மே 23: தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியான வல்லம் காட்டுப்பள்ளி வாசல் அருகே நேற்று முன்தினம் தாய் யானையிடம் இருந்து பிரிந்து தப்பி வந்த யானைக்குட்டி ஒன்று நாய்களால் கடிபட்டு உடல் நிலை மோசமான நிலையில் தனித்து விடப்பட்டு மாந்தோப்பு ஒன்றில் மயங்கிய நிலையில் கிடந்தது. இதனை பார்த்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், அதன்பேரில் வன கால்நடை மருத்துவர் மனோகரன் மற்றும் சாந்தகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் குட்டி யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
குட்டியை பிரிந்த தாய் யானை மற்றும் அதன் கூட்டம் இப்பகுதியில் சுற்றி வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு பொதுமக்கள் இப்பகுதியில் நடமாட வேண்டாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். உடல்நலம் தேறிய குட்டி யானையை தாய் யானையுடன் சேர்க்க இரண்டு தனி வனக்குழுக்கள் அமைக்கப்பட்டு தாயுடன் சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்று வனத் துறையினர் தெரிவித்தனர்.
