×

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் மும்முரம்

 

சேலம், மே 23: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேலத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாளில் கொண்டாடப்படுகிறது. ஞானம், செல்வம் மற்றும் தடைகளை தகர்க்கும் கடவுளான விநாயக பெருமான் அவதரித்த இந்நாளில் மக்கள் வீடுகளிலும், தெருக்களிலும் பிரத்யேக சிலைகளை வைத்து சிறப்பாக வழிபடுகின்றனர். இந்நாளில் விநாயகர் சிலைக்கு அருகம்புல் மற்றும் மலர் மாலைகள் அணிவித்து தீபாராதனை காட்டப்படுகிறது. விநாயகருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல் மற்றும் பிற இனிப்பு வகைகள் படைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.

வீடு மற்றும் தெருக்களில் வைக்கப்படும் சிலைகள் 3, 5 அல்லது 7 நாட்களுக்கு பிறகு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. பொது இடங்களில் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு, 10 நாட்கள் சிறப்பு பூஜைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பின்னர் மாபெரும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்படுகிறது. நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா செப்டம்பர் 14ம்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

சேலத்தில் இரண்டாவது அக்ரஹாரம், முத்துநாயக்கன்பட்டி, ஓமலூர், உத்தமசோழபுரம், ஆத்தூர், வாழப்பாடி, நெய்காரப்பட்டி உள்பட பல இடங்களில் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் ஒரு அடி முதல் 3 அடி வரையுள்ள விநாயகர் சிலைகள் களிமண்ணாலும், 2 அடி முதல் 10 அடி வரையுள்ள சிலைகள் பேப்பர் கூழ், தயாரித்து வருகின்றனர். இங்கு அன்னவாகன விநாயகர், சிங்கம் விநாயகர், லட்சுமி நாராயண விநாயகர், லிங்கம், ராஜஅலங்காரம், நாகலிங்கம், கஜமுகம், ருத்ரமூர்த்தி, 5 தலை நாகத்தின் மீது சயன விநாயகர், சிவநர்த்தனம், மான், அன்னம், மயில், சிங்கம் வாகனம், அனுமன், நரசிம்மர், மும்முகம், சித்தி புத்தி, ராஜகணபதி உள்பட பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரித்து வருகின்றனர்.

அவ்வப்போது தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் வெளி மாநிலம், கரூர், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட சேலம் மாவட்டத்தில் பல பகுதிகளுக்கு அனுப்பி வருகின்றனர். இது குறித்து சேலத்தை சேர்ந்த விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் கூறுகையில், `ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்திக்கு இரண்டு மாதத்திற்கு முன்பே, விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபடுவோம். தற்போது 20 சதவீதம் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கும் வேளையில் சிலை தயாரிப்பில் மும்முரமாக ஈடுபடுவோம்.

அவ்வப்போது தயாரிக்கும் சிலைகளுக்கு வண்ணம் கொடுத்து நல்ல முறையில் காயவைத்து, ஆர்டர்கள் கேட்ட இடத்திற்கு விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். விநாயகர் சதுர்த்திக்கு இரண்டு வாரத்திற்கு முன்பு சிலைகளின் விற்பனை களை கட்டும். இங்கு அரை அடி முதல் 12அடி உயரம் வரை சிலைகள் தயாரித்து வருகிறோம். ஒரு சிலையின் விலை ரூ.150 முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது,’ என்றனர்.

 

 

Tags : Vinayagar Chaturthi ,Salem ,Lord Ganesha ,Vinayagar Chaturthi festival ,Chaturthi ,Avani ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது