வாக்குப்பதிவு மையங்களில் அடிப்படை வசதிகள் கேள்விக்குறி கழிவறை தண்ணீர் வசதியில்லை

சாயல்குடி, மார்ச் 3:  முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியிலுள்ள வாக்குச்சாவடி மையங்கள் அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி ஓட்டை, உடைசலுடன் இருப்பதால் வாக்காளர்கள், அலுவலர்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் 60 பஞ்சாயத்து, முதுகுளத்தூர் ஒன்றியத்தில் 46 பஞ்சாயத்து, கமுதி ஒன்றியத்தில் 53 பஞ்சாயத்துகளும் உள்ளன. மூன்று பெரிய ஒன்றியங்கள் இணைந்த இந்த தொகுதியில் ஒரு லட்சத்து 54ஆயிரத்து 536ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 54ஆயிரத்து 367 பெண் வாக்காளர்களும், 9 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3லட்சத்து 89ஆயிரத்து 12 வாக்காளர்கள் உள்ளனர். இதில் கடலாடி தாலுகாவில் 141, முதுகுளத்தூர் தாலுகாவில் 133, கமுதி தாலுகாவில் 96, கீழக்கரை தாலுகாவில் 13 என மொத்தம் 383 வாக்குச்சாவடி மையங்கள் கடந்த பாராளுமன்ற தேர்லுக்கு பயன்படுத்தப்பட்டன.

வரும் ஏப்.6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக கூடுதல் எண்ணிக்கையில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்நிலையில் முதுகுளத்தூர் தொகுதியிலுள்ள பெரும்பாலான அரசு பள்ளிகள், ஊராட்சி சமுதாய கூடங்கள் வாக்குசாவடி மையங்களாக உள்ளன. சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு செய்யும் அன்றைய தினத்திற்கு முந்தைய தினம் மாலைக்குள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு செலுத்தும் இயந்திரம் வந்து விடும். தேர்தல் நடத்தும் அலுவலர்களும் வந்து விடுவர்.

ஆனால் கடலாடி, முதுகுளத்தூர், கமுதி பகுதியிலுள்ள பெரும்பாலான அரசு பள்ளிகள், ஊராட்சி சமுதாய கூடம் கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளது. கட்டிடத்தின் தரைத்தளம் இடிந்தும், ஓடுகள் உடைந்தும், கட்டிடங்கள் சேதமடைந்தும் கிடக்கிறது. மின்சார வசதியில்லாததால் மின்விளக்குகள் எரியாமலும், மின்விசிறிகள் இல்லாமலும் உள்ளது.

மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி மையத்திற்கு எளிதாக வந்து செல்ல அமைக்கப்பட்ட சாய்தள பாதை கட்டுமானங்களும் உடைந்து கிடைக்கிறது. பெரும்பாலன வாக்குச்சாவடி அமைந்துள்ள அரசு பள்ளிகளில் கழிவறை வசதிகள் கிடையாது, இருக்கின்ற கழிவறைக்கு நல்ல தண்ணீர் வசதி கிடையாது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனைவரும் வெளியூரை சேர்ந்தவர்களாக இருப்பர். தேர்தல் நடத்த வரும் அலுவலர்கள் குறிப்பாக பெண் அலுவலர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும் அவலம் உள்ளது. எனவே வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்ற மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: