×

பக்ரீத் பண்டிகைக்கு பசு, எருமை, ஒட்டகம் வெட்டலாமா, கூடாதா? ஒன்றிய அரசு சட்டத்தை பா.ஜ ஆளும் மாநில அரசுகள் அமல்படுத்துவதால் புதிய சர்ச்சை

 

புதுடெல்லி: பக்ரீத் பண்டிகைக்கு பசு, எருமை, ஒட்டகம் வெட்டலாமா, கூடாதா என்ற சர்ச்சை நாடு முழுவதும் எழுந்துள்ளது. இந்தியாவிலிருந்து எருமை இறைச்சி மற்றும் தோல் ஏற்றுமதியை மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்நாட்டு நுகர்வுக்காக இறைச்சி வெட்ட பசுக்கள், எருமைகள், ஒட்டகங்கள் உள்ளிட்டவற்றை கால்நடைச் சந்தைகளிலிருந்து வாங்குவதையும் விற்பதையும் மோடி அரசு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தடை செய்துள்ளது.

இந்த சட்டம் 2017ல் கொண்டுவரப்பட்டாலும் தற்போது பல மாநிலங்களில் அமைந்துள்ள பா.ஜ அரசுகள் அதை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன. குறிப்பாக பக்ரீத் கொண்டாட்டங்களின்போது, ​​பாதுகாக்கப்பட்ட விலங்குகளைப் பலியிடுவதைத் தடைசெய்தும், பொது இடங்களில் விலங்குகளை அறுப்பதற்குக் கட்டுப்பாடுகளை விதித்தும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன.

முதலில் மேற்குவங்க பா.ஜ அரசு இதை அமல்படுத்தியது. அதை தொடர்ந்து டெல்லி அரசும் அமல்படுத்தி உள்ளது. மே 28ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், பசுக்கள், கன்றுகள், ஒட்டகங்கள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட விலங்குகள் உள்ளிட்ட பசு இனங்களை பலியிடுவது டெல்லியில் முற்றிலும் சட்டவிரோதமானது என்றும், இது குற்றவியல் நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்றும் டெல்லி மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா நேற்று தெரிவித்தார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,’ மே 28 அன்று நடைபெறும் பண்டிகையின் போது, ​​குடியிருப்பாளர்கள் அனைத்து விதிமுறைகளையும் ஒழுங்குமுறைகளையும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். சட்டவிரோதமாக பலியிடும் செயலில் ஈடுபடும் எவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

சாலைகள், தெருக்கள், சந்துகள் மற்றும் திறந்தவெளிப் பொது இடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பலியிடுவது கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. வழிகாட்டுதல்கள் மீறப்படுவதாகத் தெரிந்தால், அதுகுறித்து உடனடியாகக் காவல்துறைக்கோ அல்லது டெல்லி அரசின் மேம்பாட்டுத் துறைக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும். எனவே விதிமுறைகளுக்கு உட்பட்டு, அமைதியான முறையில் பக்ரீத் பண்டிகையை கொண்டாட வேண்டும்’ என்றார்.

இதையடுத்து பக்ரீத் தை முன்னிட்டு டெல்லி முழுவதும் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, காவலர்கள் விரிவான வாகனச் சோதனைகள் மற்றும் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பக்ரீத் பண்டிகைக்கு மாடு, ஒட்டகம் வெட்டலாமா கூடாதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

* மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கும் தடை விதிக்க வேண்டும்: அஜ்மீர் ஷெரீப் கோரிக்கை

பசுவை தேசிய விலங்காக அறிவித்து, நாடு முழுவதும் அதை வெட்டுவதற்கும் பலியிடுவதற்கும் தடை விதிக்க வேண்டும் என அஜ்மீர் ஷெரீப் மதகுரு சையத் சர்வர் சிஷ்டி நேற்று ஒன்றிய அரசை வலியுறுத்தினார். அவர் கூறுகையில்,’ பசுவை தேசிய விலங்காக அறிவிக்கும் சட்டத்தைக் கொண்டுவர நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் பிரதமர் மோடி கூட்ட வேண்டும். இத்தகைய நடவடிக்கையை முஸ்லிம்கள் வரவேற்பார்கள்.

பசுக்கள் பால் கொடுப்பதை நிறுத்தியவுடன் மக்கள் அவற்றைச் சாலைகளில் விட்டுவிடுகிறார்கள். பசுவைக் கொன்றதாகச் சந்தேகத்தின் பேரில் முஸ்லிம்கள் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் கவலையை ஏற்படுத்துகின்றன. எனவே மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு நாடு தழுவிய தடை விதிக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்தும், பசுவை வெட்டுவதற்கு எதிராக கடுமையான சட்டங்களை பா.ஜ கொண்டு வரவில்லை’ என்றார்.

* மேற்குவங்க அரசுக்கு ஆதரவாக கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு

மேற்குவங்க பா.ஜ அரசு கடந்த மே 13 அன்று வெளியிட்ட பொது அறிவிக்கையில், காளைகள், எருதுகள், பசுக்கள், கன்றுகள் மற்றும் எருமைகள் ஆகியவை இறைச்சிக்கு உகந்தவை அல்ல என்று சான்றளிக்கும் சான்றிதழ் இல்லாமல் அவற்றை வெட்டக்கூடாது என்று உத்தரவிட்டு இருந்தது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதைக் கட்டுப்படுத்தி வெளியிடப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுஜோய் பால் மற்றும் நீதிபதி பார்த்த சாரதி சென் ஆகியோரைக் கொண்ட அமர்வு, இந்த அறிவிக்கையானது உயர் நீதிமன்றம் முன்னரே பிறப்பித்த உத்தரவுகளுக்கு இணங்கவே வெளியிடப்பட்டுள்ளது. எனவே வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன’ என்று உத்தரவிட்டுள்ளனர்.

Tags : Bakrid festival ,BJP ,New Delhi ,India ,
× RELATED நாடு முழுவதும் வெப்ப அலை: 11 மாநிலங்களில் பள்ளிகள் மூடல்