வைகை அணையில் இருந்து 6 மாதத்தில் 15,000 மில்லியன் கனஅடி தண்ணீர் திறப்பு 1,52,326 ஏக்கர் பாசன வசதி பெற்றன

ஆண்டிபட்டி, மார்ச் 3: வைகை அணையில் இருந்து 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு சேர்த்து மொத்தம் 15 ஆயிரம் மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால் பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 6 மாத காலத்தில் மட்டும் வைகை அணையில் இருந்து 15 ஆயிரம் மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். இதில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட 1,797 ஏக்கர் நிலங்களுக்கும், மதுரை மாவட்டம் வாடிபட்டி வட்டத்திற்கு உட்பட்ட 16,452 ஏக்கர் நிலங்களுக்கும், மதுரை மாவட்ட வடக்கு வட்டத்திற்கு உட்பட்ட 26,792 ஏக்கர் நிலங்களுக்கும், மொத்தம் 45,041 நிலங்களுக்கும், 120 நாட்களுக்கு 900 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அக்டோபர் மாதம் திருமங்கலம் தாலுகா மற்றும் உசிலம்பட்டி, மேலூர் தாலுகா பகுதிகளுக்கும், பேரணை மற்றும் கள்ளந்திரி பகுதிகளுக்கும் 120 நாட்களுக்கு 1800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 1 லட்சத்து 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெற்றன.

இதேபோல் கடந்த நவம்பர் மாதம் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக ஆற்றுப்பகுதி வழியாக மதுரை மாவட்டத்திற்கு 250 மில்லியன் கனஅடி தண்ணீரும், சிவகங்கை மாவட்டத்திற்கு 449 மில்லியன் கனஅடிதண்ணீரும், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 1093 மில்லியன் கனஅடி தண்ணீரும் என மொத்தம் 21 நாட்களுக்கு 1,792 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 58ம் கால்வாய் பகுதியில் இருந்து ஒரு மாத காலத்திற்கு 150 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாரத்தில் 1912 ஏக்கர் நிலங்களும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாரத்தில் 373 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 2,285 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. பின்னர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டத்திற்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்கு 3 நாட்கள் 600 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கடந்த 6 மாதத்தில் மட்டும் சுமார் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து கால்வாய் மூலமாக திறக்கப்பட்ட தண்ணீரால் 1 லட்சத்து 52 ஆயிரத்து 326 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. வைகை அணை முழுமையாக நிரம்பினால் 6091 மில்லியன் கனஅடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். அதன்படி 71 அடி உயரம் கொண்ட வைகை அணை கடந்த ஆண்டு 2 முறை 69 அடியை எட்டியது. வைகை அணையின் மொத்த நீர் இருப்பை விட சுமார் 3 மடங்கு தண்ணீர் கடந்த 6 மாதத்தில் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>