தேனி மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி வழங்கல் கலெக்டர் தகவல்

தேனி, மார்ச் 3: தேனி மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்தார்.

தேனி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் உண்ணி கூறியதாவது: தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முதல்கட்டமாக மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.  இரண்டாவது கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. மூன்றாவது கட்டமாக 45 வயது முதல் 59 வயது வரையில் உள்ள சர்க்கரை மற்றும் ரத்தக்கொதிப்பு போன்ற இணைநோய் உள்ளவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பெரியகுளம் அரசு மருத்துவமனை, போடி, உத்தமபாளையம், கம்பம், ராஜதானி, கடமலைக்குண்டு, கூடலூர், தேனி பொம்மையக்கவுண்டன்படடி, சின்னமனூர் ஆகிய 10 அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது.

இதேபோல, தேனி நகரில் உள்ள 8 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுகாதாரம் மற்றும் மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்.

தனியார் மருத்துவமனைகளில் 45 வயது முதல் 59 வயது வரையில் உள்ள சர்க்கரை மற்றும் ரத்தக்கொதிப்பு போன்ற இணைநோய் உள்ளவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் ரூ.250 வீதம் கட்டணம் செலுத்தி கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாம். தனியார் மருத்துவமனைகளில் சுகாதாரம் மற்றும் மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் கட்டணம் செலுத்தி தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாம்.

கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்வோர் அரசு வழங்கியுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளான ஆதார் அட்டை, பான்கார்டு, ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கொண்டு சென்று தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

Related Stories: