×

ஆமத்தூர் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையில் வசூல் வேட்டை கிராம மக்கள் குற்றச்சாட்டு

விருதுநகர், மார்ச் 3: ஆமத்தூர் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையின்போது வசூல் வேட்டை நடந்துள்ளதாக கிராமமக்கள் புகார் கூறியுள்ளனர்.
விருதுநகர் கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரிடம் ஆமத்தூர், வெள்ளூர் கிராம மக்கள் மூர்த்தி தலைமையில் அளித்த மனு:
ஆமத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் சுமார் 750 பேர் கல்வி கற்று வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் ஊரடங்கில் பள்ளிகள் நடைபெறவில்லை. கல்வித்துறையும் அரசு பள்ளிகளில் கல்விக்கட்டணம் வசூலிக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஆமத்தூர் அரசு பள்ளியில் கடந்த 2020 ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற்ற மாணவ, மாணவியர் சேர்க்கையின் போது 6, 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவ, மாணவியரிடம் தலா ரூ.250, ரூ.300 மற்றும் ரூ.450 வீதம் தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்த முதுநிலை ஆங்கில ஆசிரியர் சுமார் ரூ.1 லட்சம் வரை வசூலித்துள்ளார். டிச.2020ல் தலைமையாசிரியர் பொறுப்பேற்ற சர்மிளாவும் வசூலித்து வருகிறார்.

மேலும் 10 மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியரிடம் டிசி கட்டணம் என தலா ரூ.100 வசூலித்துள்ளனர். வசூலித்த தொகையை இரு ஆசிரியர்களும் பிரித்துக் கொண்டனர். இது தொடர்பாக தலைமையாசிரியரிடம் நேரில் கேட்ட போது மழுப்பலாக பதில் கூறியதுடன் பள்ளி வளர்ச்சிக்கு பயன்படுத்தி கொள்கிறோம். பெரிதுபடுத்த வேண்டாம் என கூறியுள்ளார். பட்டாசு ஆலைகளில் உயிரை பணயம் வைத்து பிள்ளைகளை படிக்க வைத்து வரும் ஏழை, எளிய கிராம மக்களிடம் கல்விக்கட்டணம் என்ற பெயரில் வசூல் நடத்தி பங்கு பிரித்து வரும் தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களிடம் வசூலித்த தொகையை திருப்பி வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி கூறுகையில், ஆமத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை கட்டணம் வசூலித்தது தொடர்பான புகார் மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags : Amthur Government School ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு