அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் குஜராத் டைட்டன்சிடம் 89 ரன் வித்தியாசத்தில் தோற்று வெளியேறியது. அகமதாபாத்தில் நேற்றிரவு நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீசியது. குஜராத் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ரன் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் சாய் சுதர்சன் 84 ரன் (53 பந்து, 4 சிக்ஸ், 7 பவுண்டரி), சுப்மன் கில் 64 ரன் (37 பந்து, 3 சிக்ஸ், 7 பவுண்டரி) குவித்தனர். பட்லர் 27 பந்தில் 57 ரன்னுடன் (4 சிக்ஸ், 5 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இமாலய இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே 13.4 ஓவரில் 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 89 ரன் தோற்றது. அதிகபட்சமாக துபே 17 பந்தில் 47 ரன் (4 சிக்ஸ், 4 பவுண்டரி) விளாசினார். சஞ்சு சாம்சன் ஆட்டத்தின் முதல் பந்திலேயே டக் அவுட்டானார். சிறப்பாக பந்து வீசிய குஜராத்தின் முகமது சிராஜ், ரபாடா, ரஷித் கான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே படுதோல்வியின் மூலம் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.
