தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் பொதுமக்கள் ஆவணங்களுடன் ரூ.1 லட்சம் கொண்டு செல்லலாம்

செங்கோட்டை, மார்ச் 3: தமிழக- கேரள எல்லையான புளியரை பகுதியில் அமைந்துள்ள சோதனைச்சாவடிகளையும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் குறித்தும் தென்காசி கலெக்டர் சமீரன், எஸ்பி சுகுணாசிங் ஆகியோர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.  பொதுமக்கள் ஒப்புதல் சீட்டு மற்றும் ஆவணங்களுடன் ஒரு லட்சம் வரை கொண்டு செல்லலாம் என தெரிவித்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்து கடந்த 26ம்தேதி தேர்தல் ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து அன்று முதல் தென்காசி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும், ஒரு தொகுதிக்கு 5 பறக்கும்படைகள், 5 நிலை கண்காணிப்பு குழுக்கள், வீடியோ பார்வை குழுக்கள், வீடியோ சர்வே குழுக்கள் என 45 தனி சிறப்பு குழுக்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட எல்லைகளிலும், ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள சோதனைச்சாவடிகளில் மக்களுக்கு எவ்வித சிரமமின்றி வாகன சோதனை  நடந்து வருகிறது. மேலும் அனைத்து நகராட்சி, உள்ளாட்சி, பேரூராட்சி பகுதிகளில் கட்சி கொடி கம்பங்கள், விளம்பரங்கள், சுவரொட்டிகள் அகற்றப்பட்டு வருகின்றன. அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து அவர்களின் ஒத்துழைப்புடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் வாக்குகள் எண்ணும் மையங்களை தேர்தல் ஆணையம் வரையறுத்துக் கொடுக்கும், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், துணை கலெக்டர்கள் உட்பட அனைத்து பதவிகளும் நிரப்பப்பட்டு தேர்தலை எதிர்கொள்ளும் விதத்தில் உள்ளது.  

அசாம் மாநில எல்லை பாதுகாப்பு படை டிஎஸ்பி தலைமையில் 82 பாதுகாப்பு படையினர் தென்காசி மாவட்ட தேர்தலுக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் இணைந்து தென்காசி மாவட்ட போலீசாரும் சோதனைகள் மேற்கொள்வர். பொதுமக்கள் ஒப்புதல் சீட்டு மற்றும் ஆவணங்களுடன் ஒரு லட்சம் வரை கொண்டு செல்லலாம். வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர், பிரதிநிதிகள், தொண்டர்கள் ரூ.50ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லக்கூடாது, ரூ.10 லட்சத்திற்கும் மேல் யாரும் பணம் கொண்டு சென்றாலும் வருமானவரித் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சோதனையில் அது முறையான பணமாக இருந்தால் திருப்பி வழங்கப்படும் என்றார்.

Related Stories:

>