வனத்துறையினர் அனுமதியை தொடர்ந்து களக்காடு தலையணையில் குவியும் சுற்றுலா பயணிகள்

களக்காடு, மார்ச் 3: வனத்துறையினர் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் களக்காடு புலிகள் காப்பகத்திற்குள்பட்ட தலையணை வனத்துறையால் சுற்றுசூழல் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பச்சையாறு மூலிகைகளை தழுவியபடி ஓடுவதாலும், இந்த தண்ணீர் குளுமை அதிகம் என்பதாலும் தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகள் தனி ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த மாதம் களக்காடு புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் குறித்த பருவமழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணிகள் பிப் 21 முதல் 28ம்தேதி வரை நடந்தது. இதில் 100பேர் ஈடுபட்டனர். இதனால் பிப்.20ம் தேதி தலையணை மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து 8 நாட்களுக்கு பின் தலையணை திறக்கப்பட்டது. இதைதொடர்ந்து உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தலையணையில் குவிந்த வண்ணம் உள்ளனர். நண்பர்கள், உறவினர்களுடன் வந்து பச்சையாற்றில் குளித்து மகிழ்கின்றனர். அங்குள்ள பூங்காவில் சிறுவர்கள் உற்சாகத்துடன் விளையாடுகின்றனர். கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கரித்து வருகிறது. வறுத்தெடுக்கும் வெயிலால் தலையணையிலும் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. இருப்பினும் ஓரளவு தண்ணீர் செல்வதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் அன்பு உத்தரவின் பேரில் வனசரகர் பாலாஜி மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: