தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் வாகன சோதனையில் களமிறங்கிய கலெக்டர்

ஸ்பிக்நகர், மார்ச் 3: தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் செந்தில்ராஜ், தானே நேரடியாக வாகன சோதனையில் களமிறங்கிய ஆய்வு மேற்கொண்டார்.  தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப். 6ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் 12ம் தேதி துவங்கி 19ம் தேதி வரை நடக்கிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனிடையே பல்வேறு அரசியல் கட்சியினர் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் பிரசாரங்களை முடுக்கிவிட்டுள்ளனர். துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்து வருகின்றனர். இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதே போல் தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில்  தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து இப்பணிகளை பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்ட கலெக்டரும்,  மாவட்ட தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ்,  வாகன சோதனையில் தானே களமிறங்கினார். பின்னர் பறக்கும் படையினருக்கு பல்வேறு  ஆலோசனைகள் வழங்கினார்.

Related Stories: