எம்எல்ஏக்களுடன் ஆலோசனை மாஜி எம்எல்ஏ லட்சுமிநாராயணன் என்.ஆர் காங்கிரசில் இணைகிறார்

புதுச்சேரி,  மார்ச் 3: புதுச்சேரி முன்னாள் அமைச்சர் லட்சுமிநாராயணன் இன்று எதிர்க்கட்சி  தலைவர் ரங்கசாமி முன்னிலையில் என்ஆர் காங்கிரசில் இணைகிறார். அவருக்கு  அக்கட்சியில் பொதுச்செயலாளர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி  வருகின்றன.

புதுச்சேரி, ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக  இருந்தவர் லட்சுமிநாராயணன். மூத்த அரசியல்வாதியான இவர், அமைச்சர் உள்ளிட்ட  பதவிகளை வகித்துள்ளார். முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சியில்  மட்டுமின்றி கட்சியிலும் தனக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை  எனக்கூறி எம்எல்ஏ பதவியை சில வாரங்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார்.

  அதன்பிறகு நடைபெற்ற சட்டசபை சிறப்பு கூட்டத்தில் பெரும்பான்மை இழந்து  காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. அப்போது, என்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்று  கட்சிகளில் இணைவது குறித்து தனது ஆதரவாளர்கள், தொகுதி மக்களுடன் கலந்து  பேசி முடிவெடுக்க இருப்பதாக தெரிவித்திருந்தார்.

 இந்த நிலையில்  முன்னாள் அமைச்சர் லட்சுமிநாராயணயன் இன்று காலை 9.30 மணியளவில் புதுச்சேரி  இசிஆரில் உள்ள என்ஆர் காங்கிரஸ் தலைமை அலுவலகம் செல்கிறார். அங்கு  எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைகிறார்.  அவருடன் முக்கிய நிர்வாகிகள் சிலரும் என்ஆர் காங்கிரசில் இணைகின்றனர். வரும் தேர்தலில் ராஜ்பவன் தொகுதி என். ஆர் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட இருக்கிறார். தொடர்ந்து அவருக்கு என்ஆர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் உள்ளிட்ட  முக்கிய பதவி வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகி வருகின்றன. பின்னர்  கட்சியின் எம்.எல்.ஏக்கள், முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசிக்கும் ரங்கசாமி, வரும்  சட்டமன்ற தேர்தல் தொடர்பான தனது கட்சியின் நிலைப்பாட்டினை அதிகாரப்பூர்வமாக  அறிவிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது.

Related Stories: